பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 43

 

கருத்துரை

திருவேங்கடமலை மேவும் திருமுருகா! அடியேன் தொண்டருக்குத் தொண்டு செய்ய அருள்செய்.

9

      கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
           வாங்கிய வேல்விழியும்                         இருள்கூரும்
      கூன்தலு நீள்வளை கொள்காந்தளு நூலிடையும்
           மாந்தளிர் போல்வடிவும்                           மிகநாடிப்
      பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
          தீங்குடனேயுழலும்                             உயிர்வாழ்வு
      பூண்டடி யேனெறியில் மாண்டிஙனே நரகில்
           வீழ்ந்தலை யாமலருள்                                புரிவாயே
      பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
           வேங்கையு மாய்மறமின்                னுடன்வாழ்வாய்
      பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
           பாண்டிய னீறணிய                           மொழிவோனே
      வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
           வேங்கட மாமலையி                          லுறைவோனே
      வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
           வேண்டவெ றாதுதவு                               பெருமாளே.

பதவுரை

பாங்கியும்=தோழியும், வேடுவரும்=வேடர்களும், ஏங்கிட=திகைக்கும் படியாக, மாமுநியும்=சிறந்த தவமுநிவராகவும், வேங்கையும் ஆய்=வேங்கை மரமாகவும் வடிவங்கொண்டு, மறமின் உடன்வாழ்வாய்=மின்னல் போன்ற வடிவுடைய வேடர் மங்கையாகிய வள்ளிபிராட்டியுடன் வாழ்பவரே! பாண்டவர் தேர் கடவும்=பாண்டு மகனாகிய அர்ச்சுனருடைய தேரைச் செலுத்திய, நீண்டபிரான் மருக=நெடியவராகிய திருமாலின் மருகரே! பாண்டியன் நீறு அணிய=கூன் பாண்டியன் திறுநீறு அணியும்படி, மொழிவோனே=”மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப் பாடியவரே! வேங்கையும்= புலியும், வாரணமும்=யானையும், வேங்கையும்=வேங்கை மரமும், மானும் வளர்=மானும் வாழ்ந்து வளர்கின்ற, வேங்கட மாமலையில் உறைவோனே=பெருமை மிக்க திருவேங்கட மலையில் வாழ்கின்றவரே! அடியர் வேண்டியபோது=அடியார்கள் வேண்டியபோது, வேண்டிய போகம் அது=அவர்கட்கு விரும்பிய சுகங்களை, வேண்ட=அவர்கள் விரும்பிக் கேட்ட போது, வெறாத உதவு பெருமாளே=வெறுக்காமல் வழங்குகின்ற பெருமையிற்