பக்கம் எண் :


432 திருப்புகழ் விரிவுரை

 

தலத்தில் வாழ்கின்ற பெருமிதமுடையவரே!  நீலமயில் சேர்ந்து விளையாடுகின்ற மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பெரிய கரிய இருள் மிகவும் நிறைந்த கூந்தலாலும், நீண்ட இன்பந் தருவதாகிய இன்ப வார்த்தைகளுடன் கூடிய சந்திரனை யொத்த தாமரை முகத்தாலும், ஆலிலை போன்ற வயிறாலும், பொது மாதரின் ஆசைவலை வீசுகின்ற மீன் போன்ற கண்களாலும், கடைந்தெடுத்த குடம் போன்ற கச்சுடன் கூடிய தனங்களாலும், மந்தமுடையவனாகி மயக்கங்கொண்டு உழன்று அடியேன் திரியலாமோ?

விரிவுரை

நீலமயில் சேரும் அந்திமாலை நிகராகி:-

மாலையில் இருளைக் கண்டு களித்து மயில்கள் தோகை விரித்து ஆடி மகிழும்.

மாலையில் மகிழ்வது மயில்,  காலையில் மகிழ்வது சேவல்.

அந்திமாலை இருள் மயமானது. அது பெண்களின் கூந்தலுக்கு ஒப்பாக இங்கே கூறப்பட்டது.

அந்தகார மிகவே நிறைந்த குழலாலும்:-

அந்தகாரம்-பேரிருள்.

ஒளியை இருள் விழுங்குவதுபோல், ஆடவரின் அறிவு ஒளியை அக்கூந்தல் விழுங்கி மயக்கஞ் செய்யவல்லது.

இத்திருப்புகழில் மற்ற மூன்று அடிகளிலும், ஆடவரது அறிவை மயக்கவல்ல பொது மாதரது அங்க இயல்களைக் கூறுகின்றார்.

நானுழன்று திரிவேனோ:-

“அடியேன் மயக்கத்தால் உழன்று திரிவது முறையோ? அவ்வாறு திரியாத வண்ணம், அடியேனுடைய மயலை அயலாக்கி முருகா!  ஆட்கொண்டருள்” என்று சுவாமிகள் ஞான பண்டிதனை வேண்டுகின்றார்.

கோல வுருவாயெழுந்து பாரதமையே யிடந்து கூவிடு முராரி:-

திதியின் மைந்தனான இரணியாட்சன் திருமாலைப் பகைத்து அவருடைய மனைவியாகிய பூமாதேவிக்குத் துன்பஞ் செய்யும் பொருட்டு பூமியைக் கடலில் அழுத்தினான். அப்போது திருமால் அழகிய வெண்பன்றியாக வடிவெடுத்து, இரணியாட்சனை வதைத்து, பூமியைப் பந்துபோல் தனது முகத்தில் உள்ள வெண் கொம்புகளில் ஏந்தி மேலே கொணர்ந்தார்.