அதனால் பழங்காலத்தில் தங்க நாணயங்களில் வராக மூர்த்தியின் வடிவைப் பொறித்தார்கள். அதனால் அந்தத் தங்க நாணயத்துக்கு வராகன் என்ற பேர் வழங்கியது. முராரி:- கிருஷ்ணாவதாரத்தில் முரன் என்ற அரக்கனை வதைத்தருளினார். அதனால் முராரி என்ற பேர் ஏற்பட்டது. கூடமுறை நீடு செம்பொன் மாமதலையூடெழுந்த கோபவரி நரசிம்மன்:- திதியின் மகனாகிய இரணியன் கடவுள் இல்லை என்று கூறி எங்கும் தன்னையே வணங்குமாறு செய்து, ஐந்து கோடியே எழுபதினாயிரத்து அறுபத்தொரு ஆண்டுகள் கொடுமை செய்தான். அவனுடைய மகன் பிரகலாதன் பிர-விசேடமான, ஹ்லாதன்- மகிழ்ச்சியுடையவன், பிரஹ்லாதன். இவர் எப்போதும் இடையறாது ஓம் நமோ நாரயணாய என்று தியானஞ் செய்து கொண்டிருந்தார். “நீ வணங்கும் மாயன் எங்கேயிருக்கின்றான்?” என்று கனகன் கனன்று வினவினான். “எங்கேயென்று கேட்கின்றாயே அச்சொல்லிலும் இருக்கின்றான், கல்லிலும் இருக்கின்றான்” என்று கூறினார் பிரகலாதர். அப்பொன் பூண் இட்ட கற்றூணை இரணியன் அறைந்தான். அதனின்றுந் திருமால் நரசிங்கமாகத் தோன்றி இரணியனை வதைத்தருளினார். “சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த காலத்தவனறைந்த கற்றூணிடை வந்தாய்” -வில்லிபாரதம் கனகன்=இரணியன் (கனகம்=இரணியம்=பொன்) அந்தத் தூண் சபாமண்டபத்தில் கூடத்தில் இருந்தது. பொன் மயமாக இருந்தது. ஆகவே, “கூடமுறை நீடு செம்பொன் மாமதலை” என்றார். மதலை-தூண். பீலிமயில் மீதுறைந்து சூரர்தமையே செயங்கொள்:- முருகப் பெருமான் சூரனுடன் போர் புரிந்தபோது இந்திரன் மயிலுருக் கொண்டு கந்தனாயகனைத் தாங்கினான். அதை இங்குக் குறிப்பிடுகின்றார். |