பக்கம் எண் :


44 திருப்புகழ் விரிவுரை

 

சிறந்தவரே! கோங்கு=கோங்கின் அரும்பு, இளநீர்=இளநீர் என்ற இரண்டும், இளக= தோல்வியடையுமாறு, வீங்கு பயோதரமும்=பருத்து வளர்ந்துள்ள தனங்களும், வாங்கிய வேல் விழியும்=செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள்கூரும் கூந்தலும்= இருள் மிகுந்த கூந்தலும், நீள் வளைகொள் காந்தளும்=பெரிய வளையல்கள் அணிந்துள்ள காந்தள் மலர்போன்ற கரங்களும், நூல் இடையும்=நூல் போன்ற மெல்லிய இடையும், மாந்தளிர் போல் வடிவும்=மாந்தளிர் போன்ற மேனியும் ஆகிய இவைகளை, மிக நாடி=மிகவும் விரும்பி, பூ கொடியார் கலவி=மலர்க்கொடி போன்ற மாதர்களின் சேர்க்கையை, நீங்க அரிது ஆகி=விடுவதற்கு முடியாதவனாகி, மிகு தீங்கு உடனே உழலும்=மிகுந்த தீச்செயல்களொடு திரிகின்ற, உயிர் வாழ்வு பூண்டு=உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு, அடியேன் நெறியில் மாண்டு=அடியேன் அந்த அவநெறியிலேயே கிடந்து இறந்து, இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல்=இங்ஙனம் நரகிலே விழுந்து அலையாமலிருக்க, அருள் புரிவாயே=திருவருளைப் புரிவீராக.

பொழிப்புரை

தோழியும் வேடர்களும் திகைக்குமாறு, வேங்கை மரமாகி நின்று, தவமுநிவராக வந்தும், வள்ளிபிராட்டியை மணந்து வாழ்பவரே! அர்ச்சுனப் பெருமானுடைய தேரைச் செலுத்திய நெடியவராம் திருமாலின் திருமருகரே! கூன் பாண்டியன் திறுநீறு தரிக்குமாறு “மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளியவரே! புலியும், யானையும், வேங்கை மரமும், மானும் வாழ்ந்து வளர்கின்ற திருவேங்கட மலையில் உறைபவரே! அடியார்கள் வேண்டிய சுகங்களை அவர்கள் விரும்பிய போதெல்லாம் வெறுக்காமல் வழங்கியருளும் பெருமிதம் உடையவரே! கோங்கின் அரும்பும், இளநீரும் நாணுமாறு பருத்து வலர்ந்துள்ள தனங்களும், செலுத்திய வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கரிய கூந்தலும், பெரிய வளைகள் தரித்துள்ள காந்தள் மலர் போன்ற கரங்களும், நூல் போன்ற மெல்லிய இடையும், மாந்தளிர் போன்ற மேனியும் ஆகிய இவைகளை மிகவும் விரும்பி மலர்க்கொடி போன்ற பெண்களின் சேர்க்கையை விட முடியாதவனாகி, தீமையுடனே திரிகின்ற உயிர் வாழ்க்கையைக் கொண்டு, அடியேன் அத் தீ நெறியிலேயே நின்று இறந்து, இவ்வண்ணமே நரகில் விழுந்து அலையாத வண்ணம் அருள் புரிவீராக.

விரிவுரை

கோங்கு:-

கோங்கின் அரும்பு தனத்திற்கு உவமையாக விளங்கும்.