பக்கம் எண் :


440 திருப்புகழ் விரிவுரை

 

குயில் அன்றில் போல குரல் இட்டு=குயில் அன்றில் என்ற பறவைகளைப் போல் குரலைக் காட்டியும், கூரிய நகரேகை=கூர்மையான நகத்தால் குறியிட்டு, பங்கம் ஆக்கி அலைந்து=விகாரப்படுத்தி உழலச் செய்து, தாடனை கொண்டு=காமநூல் முறையில் தட்டுதல்செய்து, வேட்கை எழுப்பி=காம ஆசையை எழுப்பி, காமுகர் பண்பில் வாய்க்க மயக்கி=காமங் கொண்டவர் தமது வசப்படும்படி ஆக்கி மயக்கி, கூடுதல் இயல்பு ஆக= தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச் செய்து, பண்டு இரா பகல் கற்று= முதலிலிருந்தே இரவும் பகலும் சுற்றியலைக்கும், சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு=வேசைகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பங்கர் போற்றிய= பார்வதி பாகராம் சிவபெருமான் போற்றித் துதித்த, பத்ம தாள் தொழ=உமது தாமரைத் தாளைத் தொழும் பேற்றினை, அருள்வாயே=தந்தருளுவீராக.

பொழிப்புரை

எங்கும் நிறைந்தவராய், குறைவில்லாதவராய், அறிவே அங்கமானவராய், தூய அன்பர்கள் பெற்று மகிழும் இன்பப் பொருளாய், புகழ் பெற்ற முப்பத்தாறு தத்துவங்களின் முடிவுக்கும் அப்பாறப்ட்டவராய், இந்திராதி தேவர்கள் கலந்து ஒன்றுகூடிச் சிறந்த மந்த்ர ரூப பூசனை செய்து, தாமதிக்காமல் வாழ்த்திய தேவலோகக் காவலனே! வயலூர் அரசே! திருக்கையில் உள்ள வேலாயுதத்தைக் கொண்டு, கொடிய சூரபன்மனை வென்று, தோலினால் செய்த பறையை ஒலித்து, பேய்கள் அசுரரின் தசைகளைத் தின்று கூத்தாட, மயிலின் மீது வரும் வீரரே! செம்பொன்னால் விளங்குகின்ற அழகிய திரிசிராபள்ளி மலையில் எழுந்தருளியுள்ள,தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே! அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த தனங்களைக் காட்டி மறைத்தும், சிறந்த அன்புபோல் பொய்யாக நடித்தும், தருகின்ற பணத்துக்கு ஏற்ப உறவு செய்தும், கணை தோற்கும் கூரிய கண்களால் மயக்கியும், வஞ்சகமுடைய இன்ப சாஸ்திரங்களைப் பேசியும், குயில் அன்றில் போல குரல்களைக் காட்டியும், கூர்மையான நகங்களினால் அடையாளஞ் செய்தும், விகாரப்படுத்தி அலைத்தும், காம நூலின்படி தட்டுதல் செய்தும், ஆசையையெழுப்பியும், காமங் கொண்டவரை தமது வசமாகும்படி மயக்கித் தம்முடன் கூடுதலையே இயல்பாகும்படி, முதலிலிருந்தே இரவும் பகலும் சுற்றியலைக்கும் வேசைகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்துப் பார்வதியின் பாகராகிய சிவபிரான் போற்றித் துதி செய்த உமதுபாத தாமரையை தொழும்படியான பாக்கியத்தை அடியேனுக்குத் தந்தருளுவீராக.