தோற்றிய=ஒரு நெற்றிப் பொட்டு போல் தோன்றிய, பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! அரிவையர் நெஞ்சு உருகா=மாதர்களின் மீது உள்ளம் உருகி, புணர்தரு விரகங்களினால்=சேரவேண்டும் என்று விரக நோயினால், பெரிது அவசம் விளைந்து= மிகவும் மூர்ச்சையாகி, விடாய்த்து=ஆசை விடாய் கொண்டு, அடர் முலைமேல் வீழ்ந்து= நெருங்கியுள்ள கனங்களின் மீது வீழ்ந்து, அகிலொடு சந்தன சேற்றில் முழுகி எழுந்து= அகில் சந்தனம் இவைகளின் சேற்றினில் மூழ்கி எழுந்தும், கூப்பு கை அடியில்= குவிந்துள்ள கையடியில் உள்ள, நகம் பிறை போல்பட=நகம் பிறைபோல்படும்படி, விளையாடி=விளையாடல் செய்து, பரிமளம் விஞ்சிய=வாசனை மிகுந்த, பூ குழல் சரிய மலர் நிறைந்த கூந்தல் சரிய, மருங்கு உடை போய்=இடையில் இருந்த ஆடை விலக, சில பறவைகளில் குரலாய்=சில பட்சிகளின் ஒலிகள் எழ, கயல் விழிசோர=மீன் போன்ற கண்கள் சோர்வுடைய, பனி முகமும் குறு வேர்ப்பு எழ=குளிர்ந்த முகத்தில குறு வெயர்வு உண்டாக, இதழ் அமுது உண்டு=வாயிதழைப் பருக, இரவாய் பகல்=இரவும் பகலும் ஒன்று போலக் கழித்து, பகடி இடும்படி தூர்த்தனை=கலவிக் கூத்தாடுகின்ற கொடியவனை, விடலாமோ=கைவிடலாமோ? பொழிப்புரை சரியை மார்க்கத்தையும் கிரியை மார்க்கத்தையும் அநுட்டித்து மேலான பதத்தைப் பெற விரும்பும் அன்பர்கட்கு அருளைத் தருகின்ற ஸ்ரீரங்கத்தில் உறைகின்ற சிறந்த திருமாலின் திருமருகரே! கிரவுஞ்ச மலை பொடியாகச் செலுத்திய வேலை ஏந்திக்கொண்டு மயிலின் மீது வந்து அடியேனை ஆட்கொண்ட கருணைத் திறத்தை உலகம் உணரும்படி காட்டிய குருநாதா! மூன்று உலகங்களும் வணங்குகின்ற மன்னவன் புதுக்கிய மண்டபக் கூட்டங்கள் தெருவிலே காட்சியளிக்கும் திருசிராப்பள்ளி மலைமீது உலகமறிய எழுந்தருளியிருக்கும் வீரமூர்த்தியே! அழகிய குன்றுடையவராம் சிவபெருமானுக்கு ஒரு திலகம் போல் தோன்றிய பெருமிதமுடையவரே! மாதர்களின் மீது உள்ளம் உருகி, அவர்களைச் சேரவேண்டும் என் ஆசை நோயால் மிகவும் உணர்வு அழிந்து, காம விடாய் கொண்டு, நெருங்கிய தனங்களின்மீது வீழ்ந்து, அதில் சந்தனமாகிய சேற்றில் முழுகி எழுந்து, எதிரில் குவிந்த கையில் உள்ள நகங்களினால் பிறைபோல் குறி வைத்து விளையாடி, நறுமணம் மிக்க பூ முடித்த குழல் சரியவும், இடையில் இருந்த உடை அவிழவும், சில பறவைகளின் குரல்கள் எழவும் மீன் போன்ற கண் சோரவும், குளிர்ந்த முகத்தில் சிறு வியர்வை எழவும், வாயிதழ் அமுதை உண்டு, பகல் இரவு என்று அறியாமல் கலவியில் கூத்தாடும்படி இந்தக் கொடியவனை விடலாமோ? |