பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 45

 

வாங்கிய வேல்:-

வாங்குதல்-செலுத்துதல். இந்தப் பொருளில் வேல் வாங்கு வகுப்பு என வருவதைக் காண்க.

“கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டும்
   நூல் வாங்கிடாதென்றுவேல் வாங்கி பூங்குழல்நோக்கு! நெஞ்சே”
                                                -அலங்காரம்.

காந்தள்:-

காந்தள் என்பது ஒரு மலர். இது குறிஞ்சி நிலத்தில் மலர்வது. சிவப்பாகவும், அழகாகவும் இருக்கும். முருகனுக்கு உரிய மலர்.

“சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
   பெருந்தண் கண்ணி மிலைந்த செனியன்”
                                                 -திருமுருகாற்றுப்படை.

இம்மலர் மகளிரது கரத்துக்கு உவமையாகும்.

“மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே”
                                                    -சம்பந்தர் தேவாரம்.

இங்கே காந்தள் என்பது உவமை யாகுபெயராக கரத்தைக் குறிக்கின்றது.

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட:-

வள்ளி பிராட்டியை மணஞ் செய்யும் பொருட்டு முருகவேள் வள்ளிமலையில் வேங்கை மரமாகவும், விருத்த வேதிய முனிவராகவும் ஆனார். அப்போது, வள்ளிநாயகியின் தோழியும், வேடுவர்களும் ‘ஆ’ என்று திகைத்து நின்றார்கள்.

பாண்டவர் தேர் கடவு நீண்ட பிரான்:-

திருமால் இராமாவதாரம் எடுத்தபொது சூரிய குமாரனாகிய சுக்ரீவனுக்கு உதவியாக நின்று இந்திர குமாரனாகிய வாலியை வதைத்தார். அதற்கு நேர்மாறாக,  கிருஷ்ணாவதாரத்தில் இந்திர குமாரனாகிய அர்ஜுனனுக்கு உதவியாகத் தேர் ஓட்டி, சூரிய குமாரனாகிய கர்ணனை வதைத்தார்.

திருமால் நெடியவர். ஆதலால் அவருக்கு நெடியோன் என்று ஒரு பேருண்டு.

       “உவணபதி நெடியவனும்”            -(கரிய குழல்) திருப்புகழ்.