விரிவுரை இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகளில் மாதர் கலவிச் செயலைப்பற்றி அடிகளார் கூறுகின்றார். சரியை:- நந்தவனம் அமைத்தல், மலர் பறித்தல், தொடுத்தல், ஆலயத்தை விளக்குதல், கூட்டுதல் முதலியன. கிரியை:- ஆலய பழிபாடு செய்தல், துதித்தல், பூசித்தல் முதலியன. பரமபதம் பெறுவார்க்கருள் தரு கணன்:- திருமாலை அன்புடன் வழிபட்டோர் பெறுவது பரமபதம். அது மேலான பதம். கண்ணன் என்ற சொல் கணன் என வந்தது. ரங்க புரோச்சிதன்:- ரங்கபுர உச்சிதன் திருவரங்கம் என்ற திருத்தலம் இட்சுவாகு முதலியவர்கள் வழிபட்டது. “அணியரங்கத் தந்தானை அறியாதார் அறியாதார்” -கம்பராமாயணம். பூலோக வைகுந்தம் எனப் புகழ்பெற்ற தலம். ஓங்கார வடிவாய விமானமுடையது. சயிலமெறிந்தகை வேற்கொடு மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறியும்படி காட்டிய குருநாதா:- இது சுவாமிகள் வரலாற்றைக் குறிக்கின்றது. திருவருணையில் அருணகிரியோடு வாதிட்ட சம்பந்தாண்டான் தேவியை அரசவையில் வரவழைப்பேன் என்று உறுதி கூறி, அவ்வாறு அழைக்க முடியாது தோல்வியடைந்தார் அருணகிரியார். “அதல சேடனாராட” என்ற திருப்புகழைப்பாடி வேண்டினார். முருகக் கடவுள் கம்பத்திலிருந்து வெளிப்பட்டுப் பிரபுடதேவராஜன் முதலிய அனைவரும் கண்டுகளிக்கக் காட்சியளித்தார். இந்தத் திருவருட் செயல் உலகமறிய நிகழ்ந்தது. திரிபுனவந்தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள்:- குணதரன் என்ற மகேந்திரவர்மன், ராஜ ராஜ கேசரிவர்மன் முதலிய பல மன்னர்கள் திரிசிராப்பள்ளியில் பல மண்டபங்களைக் கட்டினார்கள். |