பக்கம் எண் :


454 திருப்புகழ் விரிவுரை

 

கும்மாளமிடும் மூளிகளும் ஆகிய பொது மாதர்களின் கொடுஞ் செயல்களாலே அடியேனுடைய உயிர் வருந்தலாமோ?

விரிவுரை

அழுதழுதாசார நேசமுமுடையவர் போலே:-

பொது மகளிர் தம்மை விரும்பி வந்தவர், மேலும் மேலும் விரும்பும் பொருட்டு, கண்டபோதெல்லாம் மாயக் கண்ணீர் வடித்து அழுவர். “ஆ! எத்தனை அன்பு நம்மீது இவள் வைத்திருக்கிறாள்” என்று ஆடவர் மயங்கித் தியங்குவர்.

அநாசாரமே குடிகொண்டிருக்கின்ற அவர்கள் மிகுந்த ஆசாரமுடையவர் போலும், ஒரு துளிகூட நேசமின்றி, மிக்க நேசமுடையவர் போலும் நடித்துக் கொள்வார்கள்.

பொய் சூழ்வுறு மசடிகள்:-

தமக்கு ஏதோ கடன் இருப்பது போலும், நகைகளை அடகு வைத்து விட்டது போலும், நோய் வந்தது போலும் பேசிப் பெருந் தொகைகளைப் பறிப்பார்கள்.

மாலான காமுகர் பொன்கொடாநாள் அவருடன் வாய் பேசிடாமையு முனிதலு மாறாத தோஷிகள்:-

கை வரண்ட காரணமாக ஆடவர் காசு கொடுக்கவில்லை யானால் உடனே பிணக்கமுற்று, அவருடன் சீற்றங்கொண்டு பேசாமல் இருப்பார்கள். பலகாலும் அள்ளியள்ளித் தந்ததை மறந்து விடுவார்கள்.

பாக்கு மரத்துக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டே யிருக்க வேண்டும், ஒருநாள் விடவில்லையானால் வாடிவிடும்.

வினை செயலாலே யெனாவியு யங்கலாமோ?

பலப்பல மாயஞ் செய்யும் பரத்தையர்களின் கொடுஞ் செயல்களால் ஆவி வருந்தி யழியலாமோ! அழிவது கூடாது.

வழியினில் வாழ் ஞானபோதக:-

அறவழியில் வாழ்கின்ற ஞானதேசிகன் முருகன்.

வழி-மலைப்பக்கம். ‘மலைப் பக்கங்களில் வாழ்பவரே’ எனினும் பொருந்தும்.

பரமசுவாமீ:-

பரமன்-பெரியவங் சுவாமீ-எல்லாவற்றையும் தனக்கு உடைமையாக உடையவன் சுவாமி என்ற சொல் முருகனுக்கே உரிய சொல்.