வடமொழி நிகண்டு அமரசிம்மம். “தேவசேனாபதிசூர; சுவாமி கஜமுகானுஜ;” என்று கூறுகின்றது. வரோதய:- வர-உதய-சிவபெருமான் பால் தேவர்கள். ஆதியும் நடுவும் அருவமும் உருவும் ஒப்பும் ஏதும் வரவும் போக்கும் இன்பமும் துன்புமின்றி வேதமுங் கடந்துநின்ற விமல ஓர் குமரன்றன்னை நீதரல் வேண்டும் நுன்பால் நின்னையே நிகர்க்க என்றார். இவ்வாறு வேண்டிய தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கிய முக்கட்பெருமான் ஆறுமுகங் கொண்டு தன்னுடைய ஆறு நெற்றிக் கண்களிலிருந்து முருகனைத் தோற்றுவித்தார். அந்த வரத்தால் உதயமானவர் ஆனதால் ‘வரோதய’ என்றார். வயலியில் வேலாயுதா:- வயலூர் என்னுந் திருத்தலத்தில் அருணகிரிநாதருக்கு திருப்புகழ் பாடும் தன்மையை முருகவேள் தந்தருளினார். “பாதபங்கய முற்றிட உட்கொண் டோதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடுமென்பது செய்ப்பதியில்தந் தவனீயே” -(கோலகுங்கும) திருப்புகழ். வரை எங்குமானாய்:- முருகவேள் குறிஞ்சிநிலக் கடவுள். எல்லா மலைகளிலும் அவர் எழுந்தருளியிருக்கின்றார். “பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே”, “மலைக்கு நாயக” என்றெல்லாம் அடிகளார் பாடுகின்றார். எதிரமணா ரோரெணாயினர்:- சமண குருமார்களாகவும் தலைவராகவும் இருந்தவர்கள் எண்ணாயிரவர்கள். இவர்களின் இடையறாத பிரசாரத்தால் பாண்டி நாடு முழுவதும் சமண இருள் மூடிவிட்டது. மறிகழுமீதேற:- சமணர்கள் ‘நாங்கள் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறியவாறு, அனல்வாதம் புனல்வாதம் புரிந்து தோல்வியுற்று, தாங்கள் வாய் மதத்தால் கூறியவண்ணம் கழுக்களை நாட்டி ஏறினார்கள். நீறுபரந்துலாவ:- திருநீறு பாண்டியநாடு முழுவதும் பரவியது. அதன் பெருமை உலகெங்கும் பரவியது. |