களபசு கந்தப் புளகித இன்பக் கனதன கும்பத் திடைமூழ்குங் கலவியை நிந்தித் திலகிய நின்பொற் கழல்தொழு மன்பைத் தருவாயே தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற் சதுமறை சந்தத் தொடுபாடத் தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தியெ னுங்கொட் டுடனாடித் தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற் சிறுவஅ லங்கற் றிருமார்பா செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத் திரிசர குன்றப் பெருமாளே. பதவுரை தளர்வு அறும் அன்பர்க்கு=சோர்வு இல்லாத அன்பர்களின், உளம் எனும் மன்றில்= உள்ளமாகிய மன்றத்தில், சது மறை சந்தத்தொடு பாட=நான்கு வேதங்களும் சந்தத்துடன் பாட, தரிகிட தந்தத் திரிகிட திந்தித் திந்தித் தகுர்தி யெனும் கொட்டுடன் அடி= தரிகிட தந்தத் திரிகிட திந்தித் திந்தித் தகுர்தி யென்ற ஒலியை யுண்டாக்கி முழவங்கள் கொட்ட நடனஞ் செய்து, தெளிவு உற வந்து உற்று ஒளிர்=அன்பர்கள் தெளிவு பெறும் வண்ணம் அந்த அன்பர்களின் உள்ளத்தில் வந்து இருந்து விளங்கும், சிவன் அன்பின் சிறுவ=சிவபெருமானுடைய அன்புக் குழந்தையே! அலங்கல் திருமார்பா=பூமாலையணிந்த திருமார்பையுடையவரே! செழு மறை அம் சொல்=வளமுள்ள வேதங்களை அழகாகச் சொல்லுகின்ற, பரிபுர=சதங்கையை யணிந்தவரே! சண்ட=வலிமையுடையவரே! திரிசிர குன்ற=திரிசிரமலையில் வாழும் பெருமாளே=பெருமையில் சிறந்தவரே! இளையவர் நெஞ்ச=இளைஞர்களுடைய நெஞ்சுக்கு, தளையம் எனும்=விலங்கு என்று சொல்லத்தக்க, சிறு இடைகொடு=சிறிய இடையைக் கொண்ட, வஞ்சிக் கொடி போல்வர்=வஞ்சிக் கொடிப்போன்ற பொது மாதரது, இணை அடி கும்பிட்டு=இரண்டு கால்களையும் கும்பிட்டு, அணி அல்குல் பம்பித்து=அழகிய அல்குல் பூரிப்பு அடைய, இதழ் அமுதும் துய்த்து=இதழின் அமுதத்தைப் பருகி, அணி ஆர=அழகிய முத்துமாலையும், களப சுகந்த=கலவைச் சாந்தின் நறுமணமும், புளகித இன்ப=புளகிதமும் இன்பமும் கொண்ட, கனதன கும்பத்து இடை மூழ்கும்=பருத்த கொங்கைக்குடத்துள் மூழ்கும், கலவியை நிந்தித்து=கலவியின்பத்தை வெறுத்துத் தள்ளி, இலகிய நின்பொன்=விளங்குகின்ற உமது அழகிய, கழல் தொழும் அன்பைத் தருவாயே=திருவடியைத் தொழுகின்ற அன்பினை அடியேனுக்குத் தந்தருளுவீராக. |