பக்கம் எண் :


458 திருப்புகழ் விரிவுரை

 

பொழிப்புரை

சோர்வில்லாத அன்பர்களின் உள்ளமாகிய மன்றத்தில் நான்கு வேதங்களும் சந்தத்தோடு பாட, தரிகிட என்ற தாள ஒத்துடன் முழவங்கள் முழங்க, நடனஞ் செய்து, அன்பர்கள் தெளிவு பெறுமாறு அவர்கள் உள்ளத்தில் வந்து இருந்து விளங்குகின்ற சிவபெருமானுடைய இளங் குழந்தையே! மாலை யணிந்த அழகிய திருமார்பினரே! வளமையான வேதங்களை ஒலிக்கும் தண்டையணிந்த வலிமையுடையவரே! திரிசிரகிரியில் விளங்கும் பெருமிதமுடையவரே! இளைஞர்களுடைய நெஞ்சுக்கு விலங்கு என்று சொல்லத்தக்க சிற்றிடையுடைய வஞ்சிக்கொடி போன்ற பொது மாதரது, இரு கால்களையுங் கும்பிட்டு, அழகிய அல்குல் பூரிப்பு அடைய, வாயிதழ் அமுதைப் பருகி, அழகிய முத்து மாலையும், கலவைச் சாந்தின் நறுமணமும் புளகிதமும் கொண்ட பருத்த கொங்கைக் குடத்தில் முழுகும் கலவியின்பத்தை வெறுத்து விலக்கி விளங்குகின்ற உமது அழகிய திருவடியைத் தொழும் அன்பைத் தந்தருளுவீராக.

விரிவுரை

இளையவர் நெஞ்சத் தளையமெனுஞ் சிற்றிடை:-

பொது மாதரது சிற்றிடை இளைஞரது உள்ளத்தைச் சிறையில் இட்டுத் தளை பூட்டிவிடும் வன்மையுடையது.

கழல்தொழு மன்பைத் தருவாயே:-

இறைவனுடைய திருவடியைத் தொழுதால் பிறவிப் பிணிதீரும். அன்புடன் தொழுதல் வேண்டும்.

தளர்வறு மன்பர்க் குளமெனும் மன்றில்:-

சிவபெருமான் அடியார்களது உள்ளமாகிய நடனசாலையில் நடனம் ஆடுகின்றார். இதனையே அருட்பிரகாச வள்ளலார் கூறும் அழகான இப்பாடலைப் படியுங்கள்.

       எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல்
                     எண்ணி யுள்ளே
       ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவரவர்
                     உள்ளந்தான் சுத்த
       சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமெனநான்
                     தெரிந்தேன்; அந்த
       வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்சிந்தைமிக
                     விழைந்த தாலோ.