திருமார்பா=அவர்கள் தழுவத் தழுவுகின்ற திருமார்பினரே! செகதலம் மெச்சும் புகழ் வயலிக்கும்=பூவுலகம் பாராட்டிப் புகழ்கின்ற வயலூரிலும், திருதிகு என பொங்கியெழும் ஒலியையுடைய, திமிலை=திமிலையும், தவில்=தவிலும், துந்துபிகள் முழக்கும்=துந்துபி என்ற வாத்தியமும் முழக்கஞ் செய்கின்ற, சிரகிரி யிற்கும்= திரிசிராமலைக்கும் தலைவரான, பெருமாளே=பெருமையில் சிறந்தவரே! பகலவன் ஒக்கும்=சூரியனைப் போல் ஒளி வீசும், கனவிய ரத்னம்=பெருமை வாய்ந்த இரத்னம், பவளம்=பவளம், வெண்முத்தம்=வெண்மையான முத்து மாலைகள், திறம் ஆக பயில= நன்றாக விளங்க, முலை குன்று உடையவர் சுற்றம்=கொங்கை மாலையையுடைய பொது மகளிரது உறவினரையே, பரிவு அனவைக்கும்=பரிவு என வைக்கின்றவனும், பண ஆசை அகமகிழ் துட்டன்=பொருளாசையில் உள்ளங்களிக்கின்ற துஷ்டனும், பகிடி= வெளிவேஷக்காரனும், மருள்கொண்டு அழியும் அவத்தன்=கோம மயக்கங் கொண்ட அழிகின்ற வீணனும், குண ஈனன்=இழிந்த குணத்தனும், அறிவு இலி= அறிவில்லாதவனும், சற்றும் பொறை இலி=சிறிதும் பொறுமை இல்லாதவனும் ஆகிய அடியேன், பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே=பொருளைத் தேடிப் பெற்று உண்டு அலைகின்ற இந்த அலைச்சலை ஒழித்து என்று எனக்கு அருள் புரிவீர்? பொழிப்புரை எல்லோரும் புகழ்கின்ற நறுமணம் வீசும் இளமையான தாமரை போன்ற திருவடியை யுடையவரே! வலிமையுடைய தேவலோகத் தலைவன் இந்திரனுடைய புதல்வியாகிய தெய்வ யானையம்மையும், வள்ளியம்மையுந் தழுவ அவர்களை அணைத்துக் கொள்ளும் திருமார்பினரே! பூவுலகம் பாராட்டிப் புகழ்கின்ற வயலூரிலும், திகுதிகு என்ற ஒலியுடன் முழங்கும் திமிலை, தவில், பேரிகை முதலியவைகளை முழக்கஞ் செய்யுந் திரிசிரகிரியிலும் வாழும் பெருமிதமுடையவரே! சூரிய ஒளி போன்ற பெருமையுடைய ரத்னமாலை பவளமாலை வெண்முத்து மாலைகள் நன்றாக விளங்கும் தனக்குன்றுடைய பொது மகளிரின் உறவினரையே விரும்புகின்றவனும், பணத்தாசையால் உள்ளம் மகிழும் துஷ்டனும், வெளிவேஷக்காரனும், மோக மயக்கங்கொண்டு அழியும் வீணனும், குணங் கெட்டவனும், அறிவற்றவனும், சிறிதும் பொறுமையில்லாதவனுமாகிய அடியேன் பொருளைப் பெற்று உண்டு, அலையும் அலைச்சல் ஒழித்து என்று அருள் புரிவீர்? விரிவுரை பகலவ னொக்குங் கனவிய ரத்னம்:- சூரியனைப் போல் ஒளி செய்யும் உயர்ந்த இரத்தினங்களைப் பதித்த அணிகலன்கள். |