முலைக்குன்றுடையவர் சுற்றும் பரிவென வைக்கும்:- பொது மாதருடைய சுற்றத்தாரையே பெரிதும் மதித்து, அவர்களிடம் அன்பு வைத்து மூடர்கள் அலைகின்றார்கள். இறைவனுடைய அடியாரை அண்டினால் கடைத்தேறலாம். சார்பு அறிந்து வாழ்தல் வேண்டும். சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். -திருக்குறள். பணவாசை அகமகிழ் துட்டன்:- தன் பொருளில் வைப்பது பற்று. பிறர் பொருளில் வைப்பது ஆசை. “ஆசைக்கோர் ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆணைசெலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின் நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. -தாயுமானார். பகிடி:- வெளி வேஷம் போடுவது. உள்ளொன்று வைத்து, வெளியே பூசை செய்வது போலும், தருமஞ் செய்வது போலும் நடித்தல். பெற்றுண்டலைதல்:- அரிது தேடிப் பொருளைப் பெற்று, உண்டு அலைவது மனிதருடைய தொழிலாக அமைந்துள்ளது. “இந்த அலைச்சல் தீர, முருகா! எளியோனை யாட்கொண்டருள்” என்றும் சுவாமிகள் வேண்டுகின்றார்கள். சகலருமெச்சும் பரிமளபத்மம் தருணபதம்:- தருணம்-இளமை. முருகவேள் என்று இளையவர். தாரகனுடன் போர் புரிகின்ற காலத்தும் அவர் குழவியாகவே காட்சி தருகின்றார். குழந்தைகள் காலில் தண்டையிருக்கும். |