பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 47

 

மணவாளா=தெய்வயானை யம்மையாருடைய கொழுநரே! வேந்த=அரசரே! குமார=என்று மகலாத இளமையுடையவரே! குக=ஆன்மாக்களின் இதய குகையில் உறைபவரே! சேந்த=சேந்தரே! மயூர=மயில்வாகனத்தை யுடையவரே! வடவேங்கட மா மலையில்= தமிழ் நாட்டிற்கு வட எல்லையாகவுள்ள திருவேங்கடம் என்னும் பெருமை தங்கிய திருமலையில், உறைவோனே=எழுந்தருளியவரே! அடியர்=திருவடிக்குத் தொண்டு பூண்ட அடியவர்கள், வேண்டிய போது=விரும்பிய சமயங்களிலெல்லாம், வேண்டிய போகம் அது=விரும்பிய போகபாக்கியங்களை, வேண்ட=அவர்கள் விரும்பிக்கேட்க, வெறாது உதவும்=வெறுக்காமல் வழங்கி யருள்புரிகின்ற, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! சாந்தன் இல்=பொறுமை சிறிதுமில்லாத, மோக எரி காந்தி=மோகத்தினாலுண்டாகிய நெருப்பு மிகவும் வெப்பத்தைச் செய்யவும், அவா அனிலம் மூண்டு=ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும், அவியாத=ஒருபோதும் ஓயாத, சமய விரோத=“என் சமயம் மெய்; உன் சமயம் பொய்” என்று வாதிட்டு போராடிப் பகை கொள்ளச் செய்யும், சாம்கலை=அழிகின்ற சாத்திரமாகிய, வாரிதியை=பெருங்கடலை, நீந்த ஒணாது= கடக்க முடியாது, உலகர் தாம் துணை ஆவர் என=உலகிலுள்ள மனைவி மக்கள் தமர் நண்பராதியோர் ஆவிக்குத்துணை செய்வர் என்று நம்பியும், மடவர்=பெண்களுடைய, மேல் ஏந்து=உடலில் தாங்கிக் கொண்டிருப்பதும், வார்=இரவிக்கையுடன் கூடியதும், முளரி=தாமரை மொட்டைப் போல் இருப்பதும், சாந்து அணி=சந்தனக் கலவை தரித்துக் கொண்டிருப்பதுமாகிய, இளமார்பின் ஒடு தோய்ந்து=தனங்களுடன் கலந்து, உருகா= உள்ளம் உருகி, அறிவு தடுமாறி=புத்தி தடுமாற்றத்தையடைந்து, ஏங்கிடவும்=ஏக்கத்தை யடைந்தும் உள்ள அடியேனுடைய, ஆர் உயிரை= அருமையான ஆவியை, வாங்கிய காலன் வசம்=பற்றிய காலனுடைய வசப்பட்டு, யான் தனி பொய் விடுவது=அடியேன் துணையின்றி தனித்து நரக லோகத்திற்குப் போய்விடுவது, இயல்போதான்= தகுதியாகுமோ?

பொழிப்புரை

காந்தள் மலர் போன்ற திருக்கரங்களை யுடையவரே! மான் பெற்ற மயில் போன்ற வள்ளி பிராட்டியாருடைய மகிணரே! விசாகரே! சரவணப் பொய்கையில் தோன்றியவரே! யாவராலும் விரும்பப்படுகின்றவரே! பார்க்கத் தக்கதாகிய தேவ லோகத்தைச் சூராதி யவுணரிடமிருந்து மீட்டு காப்பாற்றியவரே! வேதங்களால் துதிக்கப்பெற்ற சிறந்த வீரரே! தெய்வயானை யம்மையாருடைய கணவரே! எப்பொருட்கு மிறைவரே! என்று மிளையவரே! ஆன்மாக்களுடைய உள்ளக் குகையில் உறைபவரே! சேந்தரே! மயில் வாகனரே! வட திசையிலுள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவரே! அடியார்கள் வேண்டிய போதெல்லாம் வேண்டிய போகங்களை வேண்டும்போது வெறுக்காமல் வழங்கியருள் செய்கின்ற பெருமிதம் உடையவரே! பொறுமை என்பது சிறிதுமில்லாமல் மோகமாகிய தீ மூண்டு