பக்கம் எண் :


48 திருப்புகழ் விரிவுரை

 

வெப்பத்தை யுண்டு செய்யவும், ஆசையாகிய சண்ட வாயு வீசவும், ஒருபோதும் ஓயாத விரோதத்தை யுண்டுபண்ணும் அழிகின்ற சமயக் கலைகளாகிய கடலைக் கடக்க வொண்ணாது, (என உணராது அதில் சுழன்றும்) உலகிலுள்ள மனைவி மக்கள் சுற்றம் நண்பராதியோரை உயிர்க்குத் துணையென எண்ணியும், கச்சணிந்து களபங்களை யணிந்து தாமரை மொட்டை யொத்து இருக்கும் பெண்களுடைய இளமுலைகளிற் கலந்தும், (காமாக்கினியால்) உள்ளம் உருகியும், அறிவு தடுமாற்றத்தை யடைந்தும் அடியேன் ஏங்கியிருக்கும் வேளையில் எனது அருமையான ஆவியைக் காலன் வந்து பற்றிக்கொண்டு செல்ல, அடியேன் அவன் வசப்பட்டுத் தனியே நரகக் குழியை நாடிச் சென்றுவிடுவது தக்கதாமோ?

விரிவுரை

சாந்தமில்:-

சாந்தம்-பொறுமை; மனிதனுக்கு சிறந்த அணிகலன் பொறுமையேயாம். தவமென்னும் பைங்கூழ்ச் செய்வதற்கு பொறையென்னுந் தண்ணீர் இன்றியைமையாததாம். பொறுமையின்றி பிறர் குற்றத்தைக் கண்டு சினங்கொண்டால் பல நாள் பாடு பட்டுச் செய்த தவம் ஒரு கணத்தில் அழிந்துபோம். பொறையின்றி கோபத்தினால் கௌசிக முனிவன் பல்லாயிரமாண்டுகள் வருந்திச் செய்த நற்றவத்தை வறிதாக்கினான். இவ்வரிய கருத்தை நம் வள்ளுவர், “பட்டினி கிடந்து தவம் செய்வோர் மிகவும் பெரியவர்; ஆனால் அவர் பிறர் கூறும் கடுஞ்சொல்லைக் கேட்டுப் பொறுக்குஞ் சாந்த சீலருக்குப் பின்னிற்பவர்தான்”

“உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
   இன்னார்சொல் நோற்பாரின் பின்”

“உண்ணாது நோற்பாரினும் பெரியர் பொறுமை யுடையவரே” என்று மிக அழகாக உபதேசிக்கின்றார்.

“சாந்தமுலேக சௌக்யமுலேது” (சாந்தமில்லை அதனால் சௌக்கியமில்லை) என்கிறார் தியாகய்யர் அவர்கள். இதன் ஆழத்தையும் அருமையும் சிந்தித்தால் சாந்த சீலர்களாக வாழ்வார்கள்.

மோக எரிகாந்தி:-

மோகம்-இது உட்பகை ஆறில் ஒன்று. இதைப் பெருந்தீயாக உருவகப் படுத்தினார்.