ஆயிரம் உருத்திராக்கமணிகளை அன்புடனும் ஒழுக்கத்துடனும் ஒருவர் அணிகுவரேல் அவரைத் திருமால் திசைமுகன் தேவர்கோமான் முதலியோர் சிவமூர்த்தியாகவே நினைந்து வணங்குவார். அவர் பெருமையை எம்மால் அளவிடற்பாற்றோ? அவரை மனிதர் என்றா எண்ணுவது? ஆய மாமணி ஆயிரம் புனைந்திடி லவரை மாயனான்முகன் புரந்தரன் வானவர் முதலோர் பாய மால்விடைப் பரனெனப் பணிகுவ ரென்றால் தூய மாமணி மிலைத்தவர் மனிதரோ சொல்வீர். -பிரமோத்தரகாண்டம். இனி சமயக் கண்கொண்டு பாராமல், மருத்துவக் கண்கொண்டு பார்க்கினும் உருத்திராக்கந் தரித்தல் சாலவும் நன்றாகும். உருத்திராக்கத்தில் தங்கச் சத்திருப்பதால் அது உடம்பில் தேய்தலாலும் அதன் மீது பட்ட தண்ணீர் உடம்பில் படுவதாலும் நோய்களை நீக்கி, மீண்டும் வரவொட்டாமல் தடுத்து நல்ல ஆரோக்கியத்தைத் தரும். தீராத ஜுர நோய்க்கு மாற்றுயர்ந்த உருத்திராக்கத்தைத் தேனில் இழைத்து மூன்று வேளை தர ஜுரம் நீங்கும் என வைத்திய நூல் பகர்கின்றது. மேலும் உருத்திராக்கத்தின் குணத்தைப்பற்றி நுணுகி யாராய்ந்த அறிஞர்கள் இவ்வாறு கூறுகின்றனர். உருத்திராக்கம் கொடிய தாகத்தை நீக்கும்; நீங்காத தோஷங்கள் மூன்றையும் போக்கும்; பித்தத்தையும் விக்கலையும் மாற்றும். கபத்தை விரட்டும். நீளுமதி தாகத்தை நீங்காமுத் தோடத்தை ஆளும்விக்கல் பித்தத்தை யாற்றுங்கால்-நாளும் இருந்திராமற் கபத்தை வீட்டுமே நல்ல உருத்திராக் கத்தின்வலி யுன். -தேரையர். இனி உருத்திராக்கத்தை யணியும் விதி. உச்சியொன்றிரு காதினில் பன்னிரண்டுவந்த வச்சிரத்தினில் நாற்பத்தொண் ணான்கணி களத்து செச்சைமார்பி னூற் றெட்டெனச் சிறந்தணிபவரே பச்சிளம்பிடி யிடத்ததென் றேத்தப் படுவார். தலையில் (அதாவது கழுத்தில்) 1 இரு காதுகளிலும் 12 |