தோளில் 40 கழுத்தில் 32 மார்பில் 108 மேலும் உருத்திராக்க மணியை பொன், பவளம், முத்து இவைகளுடன் சேர்த்து அணிதல் வேண்டும். உருத்திராக்க மணியை அணிபவர்க்குச் சிவபெருமானுடைய திருவருள் எளிதில் கிடைக்கும். சைவ சமயத்திற்குச் சிறந்த அடையாளம் திருநீறும் உருத்திராக்கமுமே. திருநீற்றை மட்டும் தரித்து உருத்திராக்க மணியாதார் அரைச் சைவரே. ஆதலால் அன்பர்கள் அளவிடற்கரிய பெருமையுடைய உருத்திராக்கமணியை யன்புடன் தரித்து உய்வார்களாக. மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர்:- சிறந்த விரதங்களுடனும், தருப்பையுடனும் ஆசாரத்துடனும் இருந்து இறைவனை முப்போதுந் திருவுருத்தீண்டி பூசிப்பவர்; அவர் ஆதிசைவரெனப்படுவர்; சிவனடிபேணுஞ் செம்மனச் செல்வர்; செந்தமிழ் நாட்டினர். கருத்துரை வேலாயுதா! சேனாபதீ! வயலூர் வள்ளல்! சிராமலையப்பர்ஸ்வாமீ! தேவரீரை அடியேன் என்புருகப் பாடியுய்ய அருள் புரிவீர். புவனத் தொருபொற் றொடிசிற் றுதறக் கருவிற் பலமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக் கடிகுந் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலூடே தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டிசியித் திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுருவத் தும்யமப் ரகரத் துயர்தீராய் |