யட்டகம் இட்டு=உயிரை சூட்சும உடலில் புகுத்தி, அது கட்டி=அத்தேகத்தைக் கட்டி, இறுக்கு=அழுந்தக் கட்டு, அடி=அடி, குத்து=குத்து, என அச்சம் விளைத்து=என்று பயத்தை உண்டு பண்ணி, அலற புரள்வித்து=அலறி அழும்படிப் புரட்டி, வருத்தி= வருத்தப்படுத்தி, மணல் சொரி வித்து=வாயிலே மணலைச் சொரிவித்து, அனல் ஊடே தவன படவிட்டு=நெருப்பினுள்ளே சூடேறும்படியாக விட்டு, உயிர் செக்கில் அரைத்து= அந்தவுயிரைச் செக்கில் இட்டு அரைத்து, அணி பற்கள் உதிர்த்து=வரிசையாயுள்ள பற்கள் உதிரும்படி அடித்து, எரி செப்பு உருவை தழுவ எண்ணி=எரிகின்ற செம்பாலாகிய பதுமையைத் தழுவும் படிச் செய்து, முள்களில் கட்டி இசித்திட= முள்ளுகளில் கட்டியிழுத்து, பாய் கண் சலனபட எற்றி=வாயும் கண்ணும் அசையும் படியாக அடித்து, இறைச்சி அறுத்து அயில்வித்து=என் உடம்பில் இருக்கின்ற இறைச்சியை அறுத்து என் வாயில் வைத்துத் தின்னும்படிச் செய்து, முரித்து=எலும்பை முரித்து, நெரித்து=நொறுக்கி நசுக்கி, உளைய=வருந்தும்படி, தளை விட்டு வருத்தும்= காலில் விலங்கு பூட்டி துன்பப்படுத்தும், யம ப்ரகர துயர் தீராய்=யமதண்டனை யென்னும் துன்பத்தைத் தீர்த்தருள்வீராக. பொழிப்புரை பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை விலக்கி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களில் வேகமாகச் செல்லுகின்ற ஆசையை ஒழித்த தவநெறியில் நின்ற சரியையாளர்கள் கிரியையாளர்கள், யோகியர்கள், மலபரிபாகம் பெற்றவர்கள், தியானத்தில் நின்று துறவு பூண்ட தூயவர்கள், உலகப்பற்றை விட்டவர்கள் ஆகிய பெரியோர்கள் தமது கருத்தில் வைத்துப் போற்றும் குருநாதரே! வயலூரில் வீற்றிருக்கும் மேலான குருநாதரே! சிவபெருமான், உத்தமர், அழிவற்றவர் உருத்திரர், முக்கண்ணர், சிரிக்கின்றவர், மழுவையேந்திய கரத்தினர், கொடிய போர்க்களத்தில் முப்புரத்தை எரித்தருளியவர், ஞானகுணத்தினர், உலக குணமில்லாதவர், ஆதிமூர்த்தி, உலகத்துக்கு மூலப் பொருளாயிருப்பவர், உண்மைப் பொருளாக விளங்குபவர், அறிவுக்கு எட்டாதவர், அற்புதமானவர், சமான மில்லாதவர் ஆகிய சிவபிரானிடந் தோன்றியவரே! தாமரைக் குளங்கள் நிறைந்த திரிசிராப்பள்ளி மலையில் உறைகின்ற, உண்மைக் குமாரரே! பெருமிதமுடையவரே! இப்பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றின் கருவில் தோன்றி, விதியின் வண்ணம் இன்ப துன்பங்களை அநுபவித்து, இறந்தபின் இயம தூதர்கள் உயிரை நுண்ணுடம்பில் புகுத்தி, அந்தத் தேகத்தைக் கட்டி, “அழுந்தக் கட்டு, அடி குத்து” என்றெல்லாம் கூறி அச்சத்தை யுண்டு பண்ணி, அலறி அழப்புரட்டி, வருத்தப் |