ஆவி புரியிட்டகமிட்டு:- தூல உடம்பில் உறைந்த உயிரைச் சூக்கும உடம்பில் இட்டு இயம தூதர் கொண்டு போவார்கள். அது புரியட்டக சரீரம் எனப்படும். ஐம்பெரும் பூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற தன் மாத்திரைகள் 5. மனம், புத்தி, அகங்காரம் 3 ஆக 8 தத்துவங்களுடன் கூடியது புரியட்டகம். இதை சூக்குமதேகம் என்றுங் கூறுவர். “ஆசைசேர் மனாதிதம்மாத்திரை புரியட்டகந்தான்” -சிவஞானசித்தியார் (153) அதுகட்டி:- சூக்குமதேகத்தைப் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போவார்கள் இயம தூதுவர். இறுக்கு அடி குத்தென அச்சம் விளைத்து:- இயமதூதர்கள் “நன்றாக இறுக்கு, அடி, குத்து,” என்று கூறி மிக்க அச்சத்தை உண்டாக்குவர்கள். அலறப் புரள்வித்து:- ஓ ஓ என்று அலறி அழும்படி தரையில் புரளவிட்டு வருத்துவர். மணற் சொரிவித்து:- ஊரவர் உடைமைகளையும், கோயில் உடைமைகளையும் உண்ட வாயில் கொதிக்கின்ற மணலை அள்ளிக்கொட்டித் துன்புறுத்துவர். அனலூடே தவனப்பட விட்டு:- சூலத்தில் குத்தி தீயில் காய்ச்சி, தாகம் எடுக்க இடர்ப்படுத்துவர். உயிர் செக்கிலரைத்து:- ஆடு கோழிகளை அறுத்து அந்த இறைச்சியை உரலில் இட்டு ஆட்டிப் பக்குவஞ் செய்து உண்டவர்களை, செக்கில் இட்டு ஆட்டி அல்லற்படுத்துவர். “நமன்தமர் செக்கிலிடும்போது அஞ்சல் என்பாய்” -அப்பர். |