அணிபற்களுதிர்த்து:- புலால் உண்டு எலும்பைக் கடித்து நொறுக்கிய பற்களைப் பளீர் பளீர் என்று கன்னத்தில அறைந்து உதிர்ப்பார்கள். ஆ! ஆ! நினைத்தாலும்நெஞ்சு பதறுகின்றது. எரி செப்புருவைத் தழுவப்பணி:- அயல் மாதரை-அயல் ஆடவரைத் தழுவிய ஆண்-பெண் இவர்களை, நரகில் ஒரு செம்பினால் ஆய பதுமையைத் தீயில் பழுக்கக் காய்ச்சி, ‘நீ தழுவிய பெண் இதோ, நீ தழுவிய கள்ளக் காதலன் இதோ! தழுவு’ என்று சாட்டையால் அடித்துத் தழுவும் படிச் செய்வார்கள். வம்புலாங்கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்பொருள் தார மென்றிவற்றை நம்பினார் இறந்தால் நமன் தமர்பற்றி எற்றிவைத் தெரியெழுகின்ற செம்பினால் இயன்ற பாலையைப் பாவி தழுவென மொழிவதற் கஞ்சி நம்பனே வந்துன் திருவடியடைந்தேன நைமி சாரணியத்துள் எந்தாய். -திருமங்கையாழ்வார். வாய் கண் சலனப்பட எற்றி:- பொய்சாட்சி சொன்னவாய், அயல்மாதரைக் கண்ட கண் இவைகள் கலங்கி அசையுமாறு அடிப்பார்கள். இறைச்சி அறுத்து அயில்வித்து:- சிற்றுயிர்களைக் கொன்று தின்ற பாவிகளை நமன்தமர் நிரயத்தில நிறுத்தி கூரிய வாளால் அவர்களின் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் திணித்துச் சாப்பிடு என்று தண்டிப்பார்கள். “கொன்றால் பாவம் தின்றால் போயிற்று” என்ற பழமொழி இதனால் ஏற்பட்டது. கொன்ற பாவம், தங்கள் உடம்பைத் தின்றால் தீரும். வருத்தும் யமப்ரகரத் துயர்தீராய்:- பாவிகளை யமதூதர்கள் துன்புறுத்துவார்கள். “முருகா! அந்த யமதண்டைனை யினின்றும் அடியேனை விலக்கிக் காத்தருள்வாய்” |