பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 487

 

பவனத்தை யொடுக்க மனக்கவலை ப்ரமையுற்று:-

பிராணவாயுவை ஓடாமல் இழுத்து உள்ளுக்குள் நிறுத்தி விழி பிதுங்குமாறு கடினமாகப் பயில்கின்ற அடயோகம் முதலிய சாதனங்கள் பயனற்றவை. அவை ஆன்மலாபத்தை நல்கா. ஆதலால் மூச்சைப் பிடித்து உடம்பை வருத்தும் அந்த மயக்கம் விலக வேண்டும் என்றார்.

“துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கி லென்னாம்?”       -கந்தரலங்காரம்.

ஐவகைப்புலனிற் கடிதிற் படரிச்சை யொழித்து:-

சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்ற ஐவகைப் புலன் வழியே விரைந்து செல்லும் அவாவை அறவே அகற்ற வேண்டும்.

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு              -திருக்குறள்.

சரியை:-

இறைவனை புற வழிபாடு புரிதல்.

கிரியை:-

இறைவனை அகத்தும் புறத்தும் வழிபடுதல்.

யோகம்:-

அகவழிபாடு முதிர முதிர, புறவழிபாடு தானே நிற்க அக வழிபாட்டுடன் நிற்றல்.

ஞானம்:-

எங்கும் அதுவாய் தரிசித்து நிற்றல்.

பரிபக்குவர்:-

ஆன்மா இருவினை யொப்பு எய்தி, மும்மல பரிபாகம் உற்று, சத்தினிபாதம் பெற்று நின்றவர் பரிபக்குவர்.

நிட்டை நிவர்த்தியினிற் பரிசுத்தர்:-

நிட்டை-தியான சமாதியில் ஓவியம் போல் நிலைத்து நின்று, உலகநெறி கழன்று இருக்குந் தூய ஞானிகள்.

விரத்தர்:-

விரத்தி-பந்த பாசங்களை வெறுத்து ஒதுக்கி நின்றவர்கள்.