பக்கம் எண் :


488 திருப்புகழ் விரிவுரை

 

கருத்ததனிற் பரவப்படு..............குருநாதர்:-

இத்தகைய பரமஞானிகள் தம் கருத்தில வைத்துத் துதிக்கும் பொருள் முருகவேள்.

சிவனுத்தமன்:-

சிவபெருமான் ஒருவரே உத்தம தெய்வம். சிவன் உத்தமன், பார்வதி உத்தமி.

 “மத்தள வயிறனை இத்தமி புதல்வனை”    -(கைத்தல) திருப்புகழ்.

நித்தன்:-

சிவபிரான் ஒருவரே அழிவில்லாதவர். ஏனைய திரிமூர்த்திகளும், தத்தம் தொழிலில் திரிமூர்த்திகளேயாவார்கள்.

       நூறுகோடி பிரமர்கள் நொங்கினார்
       ஆறுகோடி நாராயணர் அங்ஙனே
       ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்
       ஈறிலாதவன் ஈசன் ஒருவனே.                -அப்பர்

உருத்திரன்:-

ஆன்மாக்களின் துன்பத்தைக் கண்டு இரங்குபவர்.

முக்கணன்:-

சந்திரனையும் சூரியனையம் அக்னியையுங் கண்களாக வுடையவர்.

நக்கன்:-

எப்போதும் புன்சிரிப்புடன் விளங்குபவர்.

மழுக்கரன்:-

ஆன்மாக்களின் மலமாகிய அழுக்கைத் தகிக்கும் ஞானாக்கினியை ஏந்தியவர்.

சிற்குணன்:-

இறைவனுடையஅருட்குணங்கள் எட்டு, அவையாவன, தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினைனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை.