பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 49

 

அவா அனிலம்:-

மோகமாகிய தீயை வளர்ப்பதற்கு ஆசையாகிய காற்றும் துணை செய்கின்றது. அதனால் மோகத்தீ மிகவும் மூண்டெரிய ஆரம்பித்து விட்டது. “ஆசையாகிய பெருங்காற்றூடு” என்றார் தாயுமானார்.

அவியாத விரோத சாங்கலை:-

சமய சாத்திரங்கள் ஒன்றோடொன்று பகைத்து நிற்பன. அச்சமய வெறி கொண்டோரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளும் புறமும் பகைத்து அமைதியின்றி அலைந்துழல்வர்.

      “கலைகொடு பவுத்தர்காம கருமிகள் துருக்கர்மாய
           கபிலர்பக ரக்கணாதர்                           உலகாயர்
      கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரொடு
           கலகலென மிக நூல்கள்                  அதனாலே
      சிலுகி எதிர் குத்தி வாது செயவொரு வர்க்குநீதி
           தெரிவரிய சித்தியான                          உபதேசந்
      தெரிதர விளக்கி ஞான தரிசன மளித்துவீறு
           திருவடி யெனக்கு நேர்வ           தொருநாளே”
                                                              - திருப்புகழ்

       “பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
                 கல்விக்கலாத் தலையலாமோ”
                                             -(வெல்லிக்கு வீக்கு) திருப்புகழ்

       “சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கொண்
                டறுவறுங் கைக்குத்திட் டொருவர்க்குந்
                தெரிவருஞ் சத்யத்தை”
                                          -(புன மடந்தை) திருப்புகழ்

       “சகர சங்க மென முழங்கு வாதிகள்
                     சமய பஞ்ச பாதக ரறியாத”
                                            -(நிகரில் பஞ்ச) திருப்புகழ்

உலகர் தாந்துணை யாவரென:-

என்றுந் துணையாக நின்று நல்லருள் புரியும் இறைவனைத் துணை கொள்ளாது, “நாய்வாலைப் பற்றிக்கொண்டு நதியின் வெள்ளத்தைக் கடக்க நினைந்தானைப் போல் உலகிலுள்ள மனைவி மக்கள் முதலியோரை நான் துணையென்று எண்ணவும் அவர் என்னைத் துணை யென்றெண்ணவும் நின்று முடிவில் வறிதே அழிகின்றேன்” என்று குறிப்பிடுகின்றார்.