எண்ண முடியாத கோடி கோடியாக வுடையவர்கள், தந்திரத்தினால் பலர்மீது விழும் வீணிகள், காமநூலையே சதா படிப்பவர்கள், தங்கட்கு விருப்பமான பாடல்களைப் பாடி இளைஞரை அழைக்கும் மழை போன்றவர்கள், நினைவை மாற்றிப் பேய் போலாட வைக்கும் கள்ளைக் குடிப்பவர்கள், கருணை நோக்கமேயில்லாத பெரிய பாவிகளான வேசையரது இன்பம் ஆகுமோ? (ஆகாது.) விரிவுரை இத்திருப்புகழிலும் முதல் நான்கு அடிகளில் பொருட் பெண்டிரின் செயல்களைக் கூறுகின்றார். நெஞ்சமாயம் கருதொணாப்பல கோடாகோடிகள்:- விலைமாதர்களின் நெஞ்சத்தில் எழும் வஞ்ச நினைவுகள் எண்ணில்லாதன. “விரகுடன் நூறாயிர மனமுடைய மாபாவிகள்” “வஞ்சகமே கோடிகோடிகள் நெஞ்சமே சேரமேவிய வன்கணார் கோடா கோடிய மனதானார்” -திருப்புகழ். “உண்ணிறை உடையஅல்ல ஓராயிர மனத்த ஆகும்” -சிந்தாமணி. அவசமாக்கிடுபேய் நீருணிகள்:- “ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்” -திருப்புகழ். கள்ளுண்டார் அறிவு மயங்கி, செய்வன தவிர்வன அறியாதும், சொல்வன இன்னதென்று உணராதும் ஆடுவர். கள்விலை பகர்வோர், கள்ளருந்துவோர், கள்ளருந்துதற்குடன்படுவோர், கள்ளருந்துனரை மகிழுனர், இவர்கள் அனைவரும் நரகில் கிடந்து துயருறுவார்கள். குருகடாக்ஷ:- கடாக்ஷம்-கடைக்கண் பார்வை, இறைவனுடைய கடைக்கண் பார்வை ஆன்மாக்களை உய்விக்கும். குருவின் கடைக் கணிப்பு மாணவனை உய்விக்கும். |