பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 495

 

மனது கசிந்து=உள்ளம் உருகி, உன் இணை அடி என்று புகழ்வேனோ=உமது இரு திருவடிகளை அடியேன் என்று புகழ்வேனோ?

பொழிப்புரை

வள்ளி மீது மயக்கங் கொண்டு சென்று அன்புடன் அன்று, வள்ளிமலையில் விளைந்த தினைப்பயிரைக் காவல் புரிந்த வள்ளியாகிய மயிலை மணந்துகொண்ட வேலவரே! எங்கள் வயலூரில் எழுந்தருளிய முருகக் கடவுளே! தெளிந்த அறிவுடைய அன்பர்கள் துதி செய்ய விளங்குகின்ற திரிசிரா மலையில் ஆதிநாள் முதல் எல்லோருக்குந் தெரிய எழுந்தருளியிருக்கும் பெரியவராகிய சிவபெருமான் பெற்ற சிறிய பெருந்தகையே! தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே பணத்தைக் கவர்கின்ற மனத்தையுடைய பொது மாதர்களின் புனுகு அகில் சந்தனம் பன்னீர் ஆகிய நறுமணந் தோய்ந்த புளகிதங் கொண்ட தனங்கள் நெகிழ்ந்து அசையவும், மணிமாலைகள் புரளவும், இடையில் உள்ள உடை சோரவும், இருண்ட கரிய கழல் சரியவும், மனம் ஒத்து சேர்கின்ற குற்றம் பொருந்திய காம வாழ்க்கையில் திரிகின்ற தன்மையொழிந்து, மனம் கசிந்து உருகி உமது இரு திருவடிகளை என்று அடியேன் புகழ்வேனோ?

விரிவுரை

பொருள் கவர் சிந்தை:-

பொது மாதரது மனம், தம்மை நாடி வருபவரிடம் பணத்தைக் கவர்வதிலேயே தீவிரமாக வேலை செய்யும்.

மனது கசிந்து னிணையடி யென்று புகழ்வேனோ:-

இறைவனடி மலரை நினைக்கும்போது மனங்கரைந்து உருக வேண்டும்.

இன்றிருந்து நாளை அழிகின்ற மனிதர்களைப் புகழாமல் எம்பெருமானைப் புகழவேண்டும்.

வயலியில் வந்த:-

திரிசிராப்பள்ளித் திருப்புகழ் பலவற்றில் அண்மையில் உள்ள வயலூரையும் இணைத்தே சுவாமிகள் பாடுகின்றார்.

தெரிய இருந்த பெரியவர்:-

சிவபெருமான் ஒருவரே எல்லோருக்கும் பெரியவர்.