பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 497

 

பதவுரை

ஏனல் காவல் செய்=தினைப்புனத்தைக் காவல் செய்திருந்த, வேடிச்சிக்கு ஆக= வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியம்மையார் பொருட்டு, ஆசைப்பட்டு=அன்புகொண்டு, மாமயல் ஆகி=பெரிய மயக்கத்தையடைந்தவர் போல் சென்று, பொன்பாதமே பணி= பொற்பிரகாசம் பொருந்திய அவருடைய திருவடிகளை வணங்கிய, கந்தவேளே= விரும்பத்தக்க கந்தக் கடவுளே! ஆலித்து=ஆரவாரித்து, சேல்கள் பாய=சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற, வயலூரத்தில்=வயலூர் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளி, காளமோடு அடர் ஆரத்தை பூண்=விடத்தோடு கூடிய பாம்பை மாலையாகத் தரித்த, மயூர துரங்க வீரா=மயிலாகிய குதிரைமேல் பவனி வரும் வீரமூர்த்தியே! நாசிக்குள்= மூக்கின் வழியாக, ப்ராணவாயுவை=பிராணவாயுவினை, ரேசித்து எட்டாத யோகிகள்= வெளியே விடுத்து மீண்டும் பூரகஞ் செய்து சஹஸ்ராரப் பெருவெளிவரை எட்டுதலயடையாத யோகிகள், நாடிற்று காண ஒணாத என=நாடிப் பார்த்துங் காண்டற் கரிதென்னும்படி, நின்ற நாதா=அப்பாலைக் கப்பாலாக நின்ற தனிப்பெருந் தலைவரே! நாகத்து சாகைபோய்=மலையில் கிளைச் சிகரமானது நீண்டு சென்று, உயர் மேகத்தை சேர்=உயர்ந்துள்ள மேகமண்டலம்வரை சேர்ந்துள்ள, சிராமலை=திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள, நாதர்க்குச் சாமியே=சிவபெருமானுக்கு உரிய பொருளே! சுரர் தம்பிரானே=தேவர்களுக்குத் தலைவரே! வாசித்துக் காண ஒணாதது=நூல்களைக் கற்று அக்கலை யறிவினால் காணக் கூடாததும், பூசித்துக் கூட ஒணாதது=பூசை செய்து அக்கிரியா மார்க்கத்தாலும் அடைதற்கரியதும், வாய்விட்டுப் பேச ஒணாதது=வாக்கினால் இத்தன்மைத்து என்று பேசுவதற்கு முடியாததும், மாசற்கு நெஞ்சினாலே தோண ஒணாதது=குற்றமுடையோர்கள் உள்ளத்தில் தோன்றி விளங்காததும், நேசர்க்கு சேர ஒணாதது=அன்பு செய்வார் உள்ளத்தினின்றும் நீங்காது நிலைத்திருப்பதும், மாயைக்கு சூழ ஒணாதது=மாயையினால் வளைக்க முடியாததும், விந்து நாத ஓசைக்கு தூரம் ஆனது=விந்து சுழல அதனின்றும் எழும் நாத ஒலிக்கு மிக்க சேய்மையிலிருப்பதும், மாகத்துக்கு ஈறு அது ஆனது=விண்ணின் முடிவில் விளங்குவதும், லோகத்துக்கு ஆதியானது=உலகத்திற்கு முதன்மையானதும் ஆகிய மெய்ப் பொருளை, நாயேன் கண்டு=நாயினேன் உளக்கண்ணால் கண்டு, யோகத்தைச் சேருமாறு=சிவயோகத்தை அடையுமாறு, மெய்ஞானத்தைப் போதியாய்=உண்மை யறிவை உபதேசித்தருள்வீர், இனி =இன்மேல், ஊனத்தைப் போடிடாது=இவ்வூன் உடம்பை வெறுத்து ஒதுக்காது, மயங்கலாமோ=மயங்கி வறிதே யழியலாமோ?

பொழிப்புரை

தினைப்புனத்தைக் காத்திருந்த வேடமங்கையாகிய வள்ளிநாயகியார் மீது அன்புற்று மயக்கமடைந்தவர்போல் சென்று பொன்மயமான அவருடைய திருவடியில் வணங்கிய கந்தவேளே!