பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 5

 

“நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
   தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ”

“நானான தன்மை யென்று நாடாமல் நாடஇன்ப
   வானகி நின்றனை நீ வாழி பராபரமே”

“நானென்னு மோரகந்தை எவர்க்கும் வந்து
       நலிந்தவுடன் சகமாயை நானா வாகித்
தான்வந்து தொடரும்; இத்தால் வளருந் துன்பச்
       சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார்.”

என்னுந் தாயுமான அடிகளாரது நல்வாக்குகளைச் சிந்தித்துச் சித்தந்தெளிக.

உயிர் ஊனென்பதற்று:-

உயிர்ப்பற்று, உடற்பற்று; இவற்றை அகப்பற்று புறப்பற்று என்பர். இப்பற்றுகளைப் பற்றறப் போக்கிப் பற்றற்ற அப்பரமபதியைப் பற்றி நின்றவர்க்கே ஆராவமுதின் பேரா இன்பங் கிடைக்கும்.

“பாராசை யெல்லாம் பற்றறநான் பற்றிநின்ற
   பூராய மெல்லா புகன்றுவா பைங்கிளியே”

“பற்றற் றிருக்குநெறி பற்றிற் கடல் மலையுஞ்
 சுற்ற நினைக்கு மனஞ் சொன்னேன் பராபரமே”
பற்றிய பற்றற உள்ளே - தன்னைப்
 பற்றச் சொன்னான் பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் - சற்றும்
 பேசாத காரியம் பேசினான் தோழி
பற்றொழிந்து சிந்தைப் பதைப்பொழிந்து தானேதான்
அற்றிருப்ப தென்றைக்கமைப்பாய் பராபரமே.
                                         -தாயுமானார்.

வெளிநாதம் பரம்பிரம ஒளிமீதே:-

சிதாகாசத்தில் அருள்நாமத்துடன் கூடிய சிவவொளியில் கலந்து அவ்வநுபவத்தில் தோன்றும் மெய்ஞ்ஞானத்தைக் குறிப்பிடுகின்றார்.

வானம் தழைக்க:-

இடவாகு பெயராகக் கொண்டு வானத்திலுள்ள தேவர்கள் தழைத்து ஓங்கவும் என்றும் பொருள் கொள்ளலாம்.