பக்கம் எண் :


50 திருப்புகழ் விரிவுரை

 

யான்தனி போய்விடுவ தியல்போதான்:-

உடம்போடு கூடியிருந்தபோது அறத்தையும் அருந்தவத்தையுஞ் செய்யாதோர் காலன் வசப்பட்டுப் போகும்போது தனித்துச் செல்வர் எனக் குறிப்பிடுகின்றார்.

காந்தளி னானகர:-

காந்தள்-கார்த்திகைப்பூ. இப்பூவை கரத்திற்கு உவமையாகக் கூறுவது மரபு. திருவீழிமலையில் மேகம் முழங்குகின்றது; பல மயில்கள் அம்மேகத்தைக் கண்டு மகிழ்ந்து தோகையை விரித்து ஆடுகின்றன; வண்டுகள் இன்னிசை பாடுகின்றன. கொன்றை மலர்கள் உதிர்கின்றன; காற்றினால் உதிர்ந்த மலர்கள் ஆங்கு பூத்திருக்கும் காந்தள் மலரில் வீழ்கின்றன. அது பெரிய சதிர் போல் இருக்கின்றது. மேகமென்னும் ஒருவன் மத்தளம் வாசிக்க, வண்டு என்னும் நட்டுவன் பாட, மயில்கள் என்னும் பெண்கள் சதிராட, அதற்குப் பரிசாக கொன்றை மரங்கள் தம்மிடம் பூத்துள்ள தங்கக் கட்டிகள் போன்ற மலர்களை வீச, அப்பொற் கட்டிகலை காந்தள் மலர்களாகிய கரங்கள் வாங்குகின்றன. என்ன அழகிய வர்ணனை! என்னே இயற்கையின் அமைப்பு! அதன் தாண்டவம் இப்படி என்றும் ஓயாது நிகழ்கின்றது. இதனை இயற்கையாசிரியராகிய திருஞான சம்பந்தர் கூறுமாறு காண்க.

“வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
   விரைசேர் பொன்இதழிதர மென்காந்தள் கையேற்கு               
                                                    மிழலையாமே”

மான் தரு மயில்:-

மான் வயிற்றிலே ஒரு மயில் பிறந்தது என்றார்; அந்தப் பதங்கள் என்ன அழகாக அமைந்திருக்கின்றன என்பதனை அன்பர்கள் உற்றுப் பார்த்து மகிழ்க. பல முறை சொல்லி இன்புறுக. மான் என்பது இலக்குமி; மயில் என்பது வள்ளியம்மை; உவமை ஆகுபெயராக இரண்டும் நிற்கின்றன; இனி வள்ளி மலையில் தவம் புரிந்து கொண்டிருந்த திருமாலின் அவதாரமாகிய சிவ முனிவருக்கு முன்னே இலக்குமி தேவி மன் வடிவு தாங்கிவர, அம்முனிவர் கண்ணாற் புணர, மான் கருக்கொண்டு உலகீன்ற அன்னையாகிய பச்சைப் பசுங் குழவியை வள்ளிக் குழியில் ஈன்றது என்ற வரலாற்றை அது குறிப்பிடுகின்றது.

“மாமுனிவன் புணர் மானுதவுந் தனி
  மானை மனஞ் செய்த                                    பெருமாளே”
                                         -(பார நறுங்குழல்) திருப்புகழ்