பக்கம் எண் :


500 திருப்புகழ் விரிவுரை

 

தோன்ற தவஞ் செய்வோர்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், வேதங்கட்கும் தன்னுருக் காட்டாது ஒளிந்து நிற்கும் அம்முதல்வன் அன்புமிக்க ஞானசீலர்கள் உள்ளத்தில் கோயில் கொண்டிருப்பான்.

       கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
                கனலினடு ஊசியின்மேற் காலையூன்றிப்
       பொற்பறமெய் யுணர்வின்றி உறக்கமின்றிப்
                புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை யோம்பி
       நிற்பவருக் கொளித்து மறைக் கொளித்து யோக
                நீண்முனிவர்க் கொளித் தமரர்க் கொளித்து மேலாஞ்
       சிற்பதத்திற் சின்மயமாய் நிறைந்து ஞானத்
                திருவாளர் உட்கலந்த தேவதேவே.
                                                   -இராமலிங்க அடிகள்.

விந்துநாத ஓசைக்கு தூரமானது:-

சிவ தத்துவங்கள் ஐந்தனுள் அடங்குபவை விந்துவும் நாதமும். அன்மதத்துவங்கள் 24. வித்தியா தத்துவங்கள் 7. சிவதத்துவங்கள் 5. ஆக 36. தத்துவங்களையும் கடந்து நிற்கும் தத்துவாதீதனாகிய இறைவன் விந்துநாத ஓசைக்கு அப்பாற்பட்டு விளங்குபவன்.

       “நாத விந்து கலாதீ நமோ நம                 -திருப்புகழ்.

      “ஆறாறையுநீத்ததன்மே னிலையைப்
          பேறா அடியேன் பெறுமாறுளதோ”              -அநுபூதி.

ஆசைப்பட்.........பணி:-

மூவருங்காணா முழுமுதலாகிய முருகவேள் வள்ளியம்மையாரை (களவியலை) உலகிற் கறிவுறுத்தும் பொருட்டு களவு மணம் புணர்ந்தருளினார். ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு இறைவன் தனது உயர்நிலையினின்றும் கீழிறங்கி வந்து எளிதில் ஆட்கொள்ளும் கருணைப் பெருக்கை இது உணர்த்துகின்றது.

வேளே:-

ஆன்ம கோடிகளால் விரும்பத் தக்கவன்.

நாசிக்குள்.......நாதா:-

இறைவன் சிவயோகிகளால் காணத்தக்கவன்.

கருத்துரை

வள்ளி மணவாளரே! மயில் வாகனரே! சிவ யோகிகளால் காணத்தக்கவரே! சிராமலைச் செம்மலே! மெய்ஞ் ஞானத்தைப் போதித்து உய்வித்தருள்வீர்