உடைய இலக்கம் வீரர்கள் சேர்ந்த சேனையின் மேலே பறந்து உலவும், பறவை யரசனாகிய கருடன் மிகுந்த மகிழ்ச்சியடைய, திருட்டுக் குணமுடைய அசுரர்கள் அடிபட்டுச் சிதறிப் போகுமாறு, எடுத்த வேலினால், வேகத்துடன் துரத்தி வந்த அகங்காரமுள்ள வேடர்கள் வணங்கியும் முறையிட்டும் துதிக்க மயி்லில் ஏறும் போர் வீரரே! செல்வமே! சரவணபவ! சிவந்த சூரியனும், சந்திரனும் வலம் வருகின்ற திரிசிராப்பள்ளி மலையின் மீது நிலையாக அமர்ந்துள்ள பெருமிதம் உடையவரே! தம்மிடம் வந்தவர்களை வெருட்டி அடிமைப் படுத்த வல்ல விஷமிகள், உடையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள், பொய்சொல்லுபவர்கள், அதிவேகமாக மோகத்தை யுண்டாக்குபவர்கள், திரண்டுள்ள பணத்தைக் கொடுக்கவில்லையானால், வெறுப்பாகப் பார்ப்பவர்கள், வஞ்சனை உடையவர்கள், நடனம் ஆடும் காலை உடையவர்கள், காமிகள் ஆகிய பொது மாதர்களின், கஸ்தூரி வாசனை வீசும் அழகு மேம்பட்ட தனத்திலும், அவர்கள் நிற்கும் நிலையிலும், யாரையும் மயக்கி ஆசை வார்த்தைகளைச் சொல்லுகின்ற சொற்களிலும், கண்களிலும், விரிந்த மலர் மணக்கும் கூந்தலிலும், ஒளியிலும், மதிக்க முடியாத தளர்ந்த இடையிலும், ஆடையிலும், அடியேன் வீணாக மயங்கி, அவர்கட்குத் தரும்பொருட்டு பொருளைத் தேடுகின்ற காலத்து, அடியேனுக்கு வீடு பேற்றை வழங்கிய, மலர்களின் நறுமணம் வீசும் உமது நீண்ட திருவடிகளைக் கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன். விரிவுரை இத்திருப்புகழ் அருணகிரியாரின் சரித்திரக் குறிப்பு உடையது. முதல் மூன்று அடிகளில் பொதுமகளிரது இயல்புகளைக் கூறினார். நான்காம் அடியில் தாம் மாதர் மயக்கில் சிக்குண்டிருந்த போது முருகப் பெருமானுடைய திருவடி அவரை ஆட்கொண்டது எனக் கூறுகின்றார். அத்தகைய திருவடியைக் கனவிலும் நனவிலும் மறவேன் என்று நன்றி பாராட்டும் முறையில் பாடுகின்றார். இருட்டிலாச் சுரருலகு:- தேவவுலகில் இருள், துன்பம், வெப்பம் இவைகள் இரா. புண்ணியஞ் செய்தவர்கள் அங்கு இன்பத்தை நுகர்வர். |