சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற இரட்சைவாய்த்தருள் முருக:- ஆயிரங், கண்களுடைய இந்திரன் சூரபன்மனால் நாடு நகரம் கவரப் பெற்று வறியவன் ஆனான். அவனுடைய வறுமையையும் சிறுமையையும் போக்கி கந்தவேள் காத்தருளினார். இலக்கரேய்ப்படை:- நவவீரர்கள் நவசக்திகளிடம் தோன்றியபோது வேர்வையில் இலட்சம் வீரர்கள் தோன்றினார்கள். இவர்கள் முருகப் பெருமானுடைய பரிசனங்கள். வேடுவர் திறையிட முறையிட:- இரவில் முருகவேள் வள்ளியம்மையைக் களவு கொண்டு சென்றபோது, வேலவன் என்று அறியாத வேடர்கள் துரத்திக் கொண்டு போய் போர் புரிந்தார்கள். முருகனால் அழிந்தார்கள். வள்ளிபிராட்டியால் உய்வு பெற்று எழுந்தார்கள். முருகன் என்பதை உணர்ந்தபின் அவரது அடிமலர் மீது வீழ்ந்து ‘ஐயனே! எங்கள் குலதெய்வமே! நீர் எங்கட்கு மருமகனாக நாங்கள் என்ன தவஞ் செய்தோமோ? தாயே பிள்ளைக்கு நஞ்சு ஊட்டினால் யார் என்ன செய்ய முடியும்? வேலியே பயிரை மேயலாமா? எங்கள் குடிக்குப் பழி வரலாமா? தேவரீர் எங்கள் சீறூருக்கு எழுந்தருளி, எங்கள் குலக்கொடியை நாங்கள் தர நீர் மணஞ் செய்துகொள்ள வேண்டும்” என்று வணங்கி முறையிட்டார்கள். கருத்துரை திரிசிராப்பள்ளி மேவுந் தேவா! உனது அடிமலரைக் கனவிலும் நனவிலும் மறவேன். திருக்கற்குடி இத்திருத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. உய்யக் கொண்டான் என்று இப்போது வழங்குகின்றது. இது வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது. மூவர் தேவாரமும் பெற்றது. குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக் குவட்டைச் செறுத்துக் ககசாலக் |