குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக் குருத்தத் துவத்துத் தவர்சோரப் புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப் புறப்பட்ட கச்சுத் தனமாதர் புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப் புரித்துப் பதத்தைத் தருவாயே கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக் கருத்திச்சை யுற்றுப் பரிவாகக் கனகப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட் கடைப்பட்டு நிற்கைக் குரியோனே தடத்துற்ப வித்துச் சுவர்க்கத்த லத்தைத் தழைப்பித்த கொற்றைத் தனிவேலா தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத் தருகற் குடிக்குப் பெருமாளே. பதவுரை கடத்து=காட்டில் உள்ள, புனத்து=தினைப்புனத்தில் இருந்த, குறத்திக்கு=வள்ளி பிராட்டிக்கு, மெத்த கருத்து இச்சை உற்று=மிகவும் திருவுள்ளத்தில் விருப்பங்கொண்டு, பரிவு ஆக=அன்பாக, கனக்க ப்ரியப்பட்டு=மிகவும் காதல்கொண்டு, அகப்பட்டு= அம்மாதரசியின் அன்பு வலையில் சிக்குண்டு, கை கண் கடைப்பட்டு=மையணிந்த கடைக் கண்ணில் வசப்பட்டு, நிற்கைக்கு உரியோனே=நிற்பதற்கு ஆளானவரே! தடத்து உற்பவித்து=சரவணப்பொய்கையில் உதித்து, சுவர்க்க தலத்தை தழைப்பித்து= பொன்னுலகை வாழ வைத்த, கொற்ற தனி வேலா=வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலாயுதரே! தமிழ்க்குக் கவிக்கு=தமிழுக்கும், தமிழ் கவிகட்கும், புகழ் செய்பதிக்கு= புகழ் மிகுந்த வயலூருக்கும், தரு கற்குடிக்கு=மரங்கள் நிறைந்த கற்குடி மலைக்கும் தலைவரான, பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! குடத்தை தகர்த்து=குடத்தை நொறுக்கியும், களிற்றை துரத்தி=யானையைத் துரத்தியும், குவட்டை செறுத்து=மலையை அடக்கியும், ககசால குலத்தை குமைத்து=பட்சிகள் கூட்டத்தின் குலத்தை வருத்த வைத்தும், பகட்டி ஆடம்பரமாக இருந்தும், செருக்கி=அகந்தை பூண்டும், குருதத்துவத்து தவர் சோர=குருவாக இருந்து உண்மைகளை உரைக்கும் தவமுனிவர்களும் சோர்ந்து மயங்கும்படி, புடைத்து=பருத்து, பணைத்து=செழிப்புற்று, பெருக்க கதித்து=மிகவும் எழுச்சியுற்று, புறப்பட்ட=வெளித் தோன்றுவதும், கச்சு=இரவிக்கையணிந்ததுமான, தனமாதர் =தனத்தை யுடைய பொது மாதர்களின், புணர்ச்சி சமுத்ர=சேர்க்கையென்ற கடலில், திளைப்பு அற்று இருக்க=முழுகுதலை ஒழித்து இருக்கும்படி, புரித்துப் பதத்தைத் தருவாயே=அருள்புரிந்து உமது திருவடியைத் தந்தருளுவீராக. |