பக்கம் எண் :


506 திருப்புகழ் விரிவுரை

 

பொழிப்புரை

காட்டில் தினைப்புனத்தில் இருந்த வள்ளி பிராட்டியின் மேல் திருவுள்ளத்தில் மிகவும் விருப்பங்கொண்டு, அன்போடு மிக்க காதல் பூண்டு, அவருடைய அன்பு வலையில் அகப்பட்டு மைபூசிய கடைக் கண்ணில் வசமாகி நிற்பதற்கு உரியவரே! சரவணப் பொய்கையில் உதித்துப் பொன்னுலகை வாழ வைத்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலாயுதரே! தமிழுக்கும் கவிகட்கும், புகழ்பெற்ற வயலூருக்கும், மரங்கள் நிறைந்த திருக் கற்குடிக்கும் தலைவராக விளங்கும் பெருமிதமுடையவரே! குடத்தை நொறுக்கியும் யானையைக் காட்டிற்குப் போகுமாறு துரத்தியும் மலையை அடக்கியும், பறவைகள் கூட்டத்தின் குலத்தை வருந்த வைத்தும், ஆடம்பரமும் அகந்தையும் கொண்டும், குருவாக இருந்து உண்மைப் பொருளை யுணர்த்துகின்ற தவமுனிவர்களும் சோர்வு அடையுமாறு பருத்தும், செழிப்புற்றும், மிகவும் உயர்ந்தும் வெளிப்பட்டுர்த் தோன்றுவதும், இரவிக்கையுடன் கூடியதுமான தனத்தையுடைய பொது மாதர்களின் கலவிக் கடலில் முழுகுவது நீங்கி அருளில் சேர்ந்து இருக்கும்படி அருள்புரிந்து உமது பாத மலரைத் தருவீராக.

விரிவுரை

குடத்தைத் தகர்த்து:-

இத்திருப்புகழில் முதல் மூன்றடிகளில் தனத்தின் சிறப்பைக் கூறுகின்றார்.

குடம் உடையும் இயல்புடையது. தனம் உடையாதது.

ஆதலால் இயல்பாக குடம் உடைவதை, தனம் தனக்கு நிகராகாமல் தோல்வியுறச் செய்து உடைப்பதாகக் கூறுகின்றார்.

களிற்றைத் துரத்தி:-

யானையின் மத்தகம் தனத்துக்கு உவமையாகாததால் யானைகளை இத்தனம் காட்டிற்கு விரட்டியடித்துவிட்டது. இயல்பாகக் காட்டில் யானை வாழ்கின்றது. தனம் அதை ஓட்டி விட்டதாகக் கூறுகின்றது தற்குறிப்பேற்றம் என்ற அணி.

குவட்டைச் செலுத்து:-

மேருவுடன் பகைத்த விந்தமலை வளர்ந்து நின்றது. அகத்தியர் அம்மலையை அடக்கிப் பாதலம் புகுமாறு செய்தார். இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்து அடக்கினான்.