பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 51

 

சேர்ந்த:-

செம்மைப் பண்புடையவன்.

வேங்கட மாமலையி லுறைவோனே:-

தற்போது விஷ்ணு ஸ்தலமாக விளங்குகின்ற திருவேங்கட மலை முருக க்ஷேத்திரமுமாகும்.

வடவேங்கடம்

திருவேங்கடம் என்னும் வானமளாவிய வலமலி தமிழ் நாட்டிற்கு வடவெல்லையாகத் திகழ்வது.

       “வடவேங்கடம் தென் குமரி யாயிடைத்
       தமிழ் கூறு நல்லுலகத்து”                         -பனம்பாரனார்

இத்தகைய திருமலையில் பண்டைக் காலத்தில் திருமால் கோயிலும் திருமுருகன் கோயிலும் இருந்திருத்தல் வேண்டும். அருணகிரிநாதரே இரண்டையுங் கூறுகின்றார். “திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே” என்று முருக க்ஷேத்திரமாகவும், உலகீன்ற பச்சை யுமையணன் வடவேங்கடத்திலுறைபவன் உயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே” என்று திருமால் திருத்தலமாகவும் கூறுகின்றனர். இதனை நுனித்து நோக்க அம்மலையில் திருமாலும் திருவேலிறைவனும் திருக்கோயில் கொண்டிருக்கின்றனர் என்பது விளாங்குகின்றது.

இதுவேயுமன்றி ஆழ்வாராதிகளும் அங்குள்ள திருமாலைப் பாடியருளியதாலும், கந்தபுராணம் வழிநடைப் படலத்தில்,

“அண்ட மன்னுயி ரீன்றவ ளுடன் முனிவாகித்
   தொண்டகங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
   மாண்டுபாதலத் தேகியே யோர் குகை வழியே
   பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்”

என வருவதனாலும் இரு கடவுளரும் கோயில் கொண்டு இருந்தனரெனத் தோன்றுகின்றது.

திருப்பதி மலையின் மேலுள்ள சுவாமி புஷ்கரணி. வில்வ அர்ச்சனை, “பாலாஜி” என்னும் வழக்கு இவைகளும் முருக க்ஷேத்திரம் என்பதனை வலியுறுத்துகின்றன. பல மாறுதல்கள் உண்டாவது உலக வழக்கே யாதலின் முருகனாலயம் மறைந்தோ மாறியோ போய்விட்டது.

வேண்டிய போதடியர்.......வெறாதுதவு:-

முருகக் கடவுள் அன்பர்கள் விரும்பிய அனைத்தும் விரும்பிய போதெல்லாம் வெறுக்காமல் தரும் வள்ளல்.