பக்கம் எண் :


510 திருப்புகழ் விரிவுரை

 

சிறியேன் அலையாத வண்ணம், மொழிக்கு=அடியேனுடைய மொழியையும், தரத்துக்கு உற்ற தமிழ்க்கு=தகுதியுள்ள தமிழையும், சரித்து=அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு, சித்தி முகத்தில் களிப்பு பெற்று=வீடு பேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன், மயில் ஏறி=மயிலின்மீது ஏறி, உறுக்கி சினத்து சத்தி அயிற்கு=தண்டிக்கும் சினம் வாய்ந்த ஞான வேலை, தரத்தை கைக்கு உள்=தகுதியுடன் திருக்கரத்தில், உதிக்க பணித்து=தோன்ற எடுத்துக் கொண்டு, பக்கல் வருவாயே=அடியேனுடைய அருகில் வந்தருளுவீராக, உனை சொல் துதிக்கத்தக்க=உம்மை நல்ல சொற்களைக் கொண்டு துதிசெய்யத்தக்க, கருத்தைக் கொடுப்பை=கருத்தைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

எட்டுச் சித்திகளும் அமைந்த திருக்கற்குடியென்ற திருத்தலத்தில் எழுந்தருளிய அன்பர்கள் வணங்கும் பெருமிதமுடையவரே! மோகத்தால் மனம் வளைந்து, மலைக்கு ஒப்பான தனத்துக்காக, தனத்தைக் கொட்டிக் கொடுத்து, நிரம்ப இன்பத்தை அநுபவித்து, அதில் அகப்பட்டு, பல நாள்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு, துக்கங்களுக்கும் வேதனைகளுக்கும், ஆளாகி, உண்மையில் மரணத்தையடைந்த அடியேனை, யமதுதர்கள் இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டுபோய், உதைத்தும், துடிதுடிக்கப் பற்றியும், சுற்றி நின்று இழுத்து மிதித்தும், என் கணக்குக் கட்டை விரித்துக் காட்டியும், அந்த ஏட்டில் உள்ள என் பாவச் செயல்களுக்கு ஏற்றவாறு, என்னை முறுக்கியும், திருப்பித் திருப்பிச் சுட்டும், மலக் குழியில் அழுத்தியும், திட்டியும் முழுதும் கலங்க வைக்கும் அக்காலத்தில் அடியேன் அலையாத வண்ணம், அடியேனுடைய மொழியையும், தகுதியுள்ள தமிழையும் ஏற்றுக்கொண்டு, வீடுபேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன் மயிலில் ஏறி, தண்டிக்குங் கோபம் வாய்ந்த சக்தி வேலைத் தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்துக்கொண்டு, அடியேனுடைய அருகில் வந்தருளுக; உம்மை இனிய சொற்களைக் கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தைத் தந்தருளுக.

விரிவுரை

இத்திருப்புகழில் இயம தண்டனையை அடிகளார் விரித்துக் கூறியருளுகின்றார். முன் திரிசிராமலைத் திருப்புகழ் “புவனத்தொரு” என்ற பாடலிலும் இவ்வாறு கூறியருளினார்.

நெறித்து:-

நெறிதல்-வளைதல்.