மோகத்தால் மனம் குழைந்து மனிதன் வளைகின்றான். மகளிரிடம் வளைந்து நிற்கின்றான். தனத்தைக் கொட்டி:- விலமகளிரின் தனத்தை விரும்பி நிரம்பவும் தனத்தைக் கொட்டித் தந்து மனிதர் மகிழ்ந்து மயங்குகின்றார்கள். சுகித்துச் சிக்கி:- அம்மாதரிடம் இன்புற்று, அவர்களின் மையல் வலையில் சிக்கிக் கொள்ளுகின்றார்கள் “திண்ணிய நெஞ்சப்பறவை சிக்கக் குழற்காட்டில் கண்ணிவைப்பார் மாயங் கடக்குநாள் எந்நாளோ?” -தாயுமானார். வெகுநாளாய் நினைத்து கொடு:- மனிதன் இறைவனையும், தான் வந்த கருமத்தையும் நினையாமல், முன்னுகர்ந்த போக இன்பத்தையே சதா நினந்து நெஞ்சம் புண்ணாகி மண்ணாகின்றான். நிசத்திற் சுழுத்திப்பட்ட அடியேனை:- தினந்தினஞ் சுழுத்தி (தூக்கம்) வருகின்றது. முடிவில் பெரிய சுழுத்தி மரணத் தூக்கம் வந்து விடுகின்றது. அதுதான் உண்மையான தூக்கம். இறுக்கிப் பிடித்துக் கட்டி:- யமதூதர்கள், பாவிகளைப் பாசக் கயிற்றால் சேர்த்து இறுக்கிக் கட்டிப்பிடித்து இழுத்து, தண்ணீர் இல்லாத சுடுமணற்பாதையில், தண்ணீர் தண்ணீர் என்றுஆன்மா தவிக்கத் தவிக்க அடித்தும் உதைத்து துன்புறுத்திக் கொண்டு செல்லுவார்கள். “விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே” -கந்தரலங்காரம். எனக்குக் கணக்குக் கட்டு விரித்து:- என்னுடைய பாவச் செயல்கள் நிரம்பிய கணக்குக் கட்டுகளை எடுத்துக் காட்டுவார்கள் யமதூதர்கள். |