ஆன்மாக்கள் நினைப்பவை, பேசுபவை, செய்பவை யனைத்தும் அக்கணக்கில் தானே பதிவாகும். இயமதூதர்கள் அதைக் காட்டி, அக்கணக்கின்படி தண்டிப்பார்கள். ஆதலால் தீய எண்ணங்களை மனதில்கூட நினையாமல் எப்போதும் எம்பெருமானையே நினைக்க வேண்டும். முறுக்கித் திருப்பிச் சுட்டு:- முகத்தைப் பின்புறமாக முறுக்கியும், திருப்பித் திருப்பி நெருப்பில் சுட்டும் துன்புறுத்துவார்கள். திட்டி:- “பெறுவதற்கரிய மனிதப் பிறவியெடுத்து அப்பிறப்பை வீணாக்கிய பாவி! சண்டாளா! மூடனே! குடிகேடனே! என்று வைவார்கள். “மயலது பொலாத வம்பன் விரகுடைய னாகுமென்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள்” -திருப்புகழ். முழுக்கக் கலக்கப்பட்டு அலையாமல்:- “இத்தகைய நரக வேதனையில் அடியேன் முழுதும் துன்புற்று அலையாத வண்ணம் காத்தருள்வாய்” என்று சுவாமிகள் முருகனை வழுத்துகின்றார். மொழிக்குத் தரத்துக்குற்ற மொழிக்கு:- இனிய மொழியையும் தரமுள்ள தமிழ் மொழியையும் ஏற்றுக்கொண்டு மயிலின் மீது வந்தருள்க. துதிக்கத்தக்க கருத்தைக் கொடுப்பை:- முருகனைத் துதிக்கத்தக்க உயர்ந்த எண்ணத்தைத் தந்தருள்க என்று வேண்டுகின்றார். சித்தியுடைக் கற்குடி:- திருக்கற்குடி என்ற திருத்தலம் அஷ்டமா சித்திகளையும் உடைய அரிய தலம். “அட்டமாசித்தி அணைதரு காளத்தி” என்று திருஞான சம்பந்தர் திருக்காளத்தி மலையைச் சிறப்பிக்கின்றார். |