பிணையொத்து:- பிணை-பெண்மான். பெண் மானைப் போன்ற மருண்ட பார்வையுடைய கண்கள். பிணையோர் மடநோக்கும் நாணும் உடையார்க்கு அணிஎவனோ ஏதில தந்து. -திருக்குறள். அலர்பொற் கமலத்தில் மைகண்:- அலர்ந்த அழகிய தாமரை மலர்போன்ற கண்கள். நலமற்றறிவாற் றுணர்வற்றனன்:- ஆன்ம லாபமாகிய நலத்தையும், நல்லறிவையும் மெய் யுணர்வையும் மாந்தர்கள் மாதர் மயலால் இழந்து விடுகின்றார்கள். நற்கதி எப்படி பெற்றிடுவேனோ? :- “நலமான பரகதியை அடியேன் எவ்வாறு பெற்று உய்வேனோ?” என்று அடிகளார் ஏங்குகின்றார். புயலுற்றியல் மைக்கடலிற்புகு கொக்கற:- கொக்கு-மாமரம். முடிவில் சூரபன்மன் கடலில் மாமரமாக நின்றான். விடம்பிடித் தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏதி மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே. -கந்தபுராணம். செயசித்திரமுத் தமிழுற்பவநற் செபமுற் பொருளுற்றருள் வாழ்வே:- திருஞான சம்பந்தரை முருகவேள் அதிட்டித்துச் செய்த திருவருளை இது குறிக்கின்றது. சிவதைப்பதி:- இரத்தினகிரிக்குச் சிவாயம் என்று பெயர் உண்டு. “சடைவிராய விருப்புச் சிவாயமே சங்கரற்கு விருப்புச் சிவாயமே” -வாட்போக்கிக் கலம்பகம். “சடைவிராய விருப்புச் சிவாயமே |