ஐம்புலன்களால் வரும் பொய்யின்பங்களில் திளைத்து விளையாடி, தகுந்த மாதர்களையும், அவர்களது வீடுகளையும் தேடிச் சென்று, அவர்களுடன் பல மாய வித்தைகளை விளையாடுகின்ற தொழில், சீச்சீ என்று பலர் வெறுக்க, உடல் வருந்தி அடியேன் அழியலாமோ? உமது முடிவில்லாத திருவடியை அடியேனுக்குத் தந்தருளுவீராக. விரிவுரை சுற்ற கபடோடு:- பொருட் பெண்டிர்களைச் சுற்றி வஞ்சனையும் சூதும் வாதும் களவும் பழி பாவங்களும் இருக்கும். பொறியாலே:- மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐம்பொறிகளால் மக்கள் அலைப்புண்டு இடர்ப்படுகின்றார்கள். “ஓரவொட்டார் ஒன்றை உன்னவொட்டார் மலர் இட்டுனதாள் சேரவொட்டார் ஐவர் செய்வ தென்யான்” -கந்தரலங்காரம். சூதரைவர்:- இவர்கள் ஐம்புல வேடர்கள். “ஐம்புலவேடரின் அயர்ந்தனை” -சிவஞானபோதம். தித்திமிதி . . . . .டூடுடுடு என தாளம்:- இது போர்க்களத்தில் ஒலிக்கின்ற தாள வகைகள். திக்குமுகிலாட:- திசைகளில் ஒலி திரண்டு ஒலிக்க. முகில்-திரள். அரியாட. . . . பூத கணமாட:- அப் போர்க்களத்தில் ஆனந்த மிகுதியால் அரி, அயன், அரன், உமை, முனிவர், இயமன், பேய், நரி, காகம், பூதம் ஆகிய அனைத்தும் ஆடி மகிழ்ந்தன. எத்தி:- எத்துதல்-ஏமாற்றுதல். |