முருகவேள் வள்ளியிடம் வேடனாகவும், வேங்கை மரமாகவும், வளையல்காரனாகவும், தவ முதியோனாகவும் சென்று ஏமாற்றித் திருவிளையாடல் புரிந்தருளினார். சித்தமலை காமுக:- சித்தம் அலை காமுக. வள்ளியின் சித்தத்தை அலைத்த-கலக்கிய காமுகரே! நமசிவாயன்:- சிவபெருமானுடைய திருநாமங்களில் இது சிறந்தது. “நக்கர்தம் நாமம் நமச்சிவாயவ் வென்பார் நல்லரே” “நாதன் நாமம் நமச்சிவாயவே” -சம்பந்தர். இரத்தினகிரி மேவும் இளம் பூரணரே! உனது அழியாத அடிமலரை அளித்தருள்வீர். பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தம தானசற் குணநேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் தினிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே. பதவுரை உத்தம அதனா=உத்தம குணத்தைப் பற்றிக்கொண்டுள்ள, சற்குணர் நேயா=நல்லியல் புடையோரது நண்பரே! ஒப்பு இலா=சமானமில்லாத, மா=பெருமை பொருந்திய, மணிக்கிரிவாசா=இரத்தினகிரியில் வாழ்பவரே! வித்தகா=பேரறிவாளரே! ஞானசக்தி நிபாதா =திருவருள் ஞானம் பதியச் செய்பவரே! வெற்றிவேல் ஆயுத பெருமாளே=வெற்றியைத் தருகின்ற வேற்படையையுடைய பெருமையின் மிக்கவரே! யான்=அடியேன், பக்தியால் உன்னைப்பற்றி=அன்பினால் உறுதியாகப்பற்றி, திருப்புகழ் பலகாலும் பாடி=தேவரீருடைய திருப்புகழைப் பலகாலும் பாடி, முத்தனாம் ஆறு=ஜீவன் முத்தனாக ஆகுமாறு, எனை=அடியேனை, பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு=இடையறா இன்ப வாழ்வுடன் கூடி சிவகதியில் சேர்ந்து உய்வுபெற, அருள்வாயே=திருவருள் புரிவீர். |