பொழிபுரை உத்தம குணங்கள் பொருந்திய சற்குண சீலர்களுடைய நேயரே! உவமையில்லாத பெருமை மிக்க இரத்தினகிரியில் வாழ்பவரே! பேரறிவாளரே! திருவருள் ஞானத்தைப் பதிய வைப்பவரே! வெற்றி வேற்படையை யுடைய பெருமித முள்ளவரே! அடியேன் தேவரீரை அன்பினால் விடாதுபற்றி, திருப்புகழைப் பலகாலும் பாடி, ஜீவன் முத்தனாக ஆகுமாறு பெருவாழ்வாம் முத்தியைச் சேர்ந்து உய்வுபெற திருஅருள் புரிவீர். விரிவுரை பக்தியால்.........பற்றி:- மூவருந் தேவருங் காணா முழு முதலாகிய முருகவேளைப் பக்தியாலேயே பற்ற வேண்டும். அவன் “பக்திவலையில் படுவோன் காண்க,” “பத்திசெய் யடியவரைப் பரம்பரத் துய்ப்பவன்,” பற்றற்ற அப்பரமபதியே ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாக நிற்பவன். முத்தன்:- இம்மையிலேயே முத்தி பெற்றவன். மணிக்கிரி:- இரத்தினகிரி; இது வாட்போக்கி என்றும் பெயர் பெறும். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி ஜில்லா, குளித்தலை இரயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கில் ஐந்து மைல் தொலைவில் விளங்குகின்றது. சத்தி நிபாதா:- சத்தி-அருள். நி-மிகுதி. பாதம்-பதிதல். திருவருள் ஞானத்தை ஆன்மாக்களுக்குப் பதிய வைப்பவர். கருத்துரை சற்குணர் நேயரே! வித்தகரே! இரத்தினகிரி வாசரே! சத்திநிபாதரே! வேலாயுதரே! அடியேன் பக்தியால் உம்மைப் பற்றி, திருப்புகழைப் பாடி முத்திபெற அருள்வீர். |