சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே. பதவுரை கரி=யானைகளும், வாம் பரி=தாவுகின்ற குதிரைகளும், தேர்=தேர்களும், திரள் சேனையும் உடனாம்=திரண்ட சேனகளும் கொண்டவனாகிய துரியோதனன் ஆதிகள்= துரியோதனன் முதலியவர்கள், களம் மாண்டிட=போர்க்களத்தில் இறந்து போமாறு, ஒரு பாரதம் அதில்=ஒரு பாரதப் போரில் ஈடுபட்டு, கன பாண்டவர்=பெருமை மிக்க அர்ச்சுனனுடைய, தேர்தனிலே=தேரில் பூட்டிய, எழு பரி தூண்டிய சாரதி ஆகிய=ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய பாகனும், கதிர் ஓங்கிய நேமியனாம் அரி=ஒளி மிகுந்த சக்ராயுதத்தையுடைய அரியும், ரகுராமன்=ரகுராமரும், திரை நீண்டு இரை வாரியும்=அலைகள் நீண்டு ஒலிக்கும் சமுத்திரமும், வாலியும்=வாலியும், நெடிது ஓங்கு மராமரம் ஏழொடு=நீண்டு ஓங்கிய ஏழு மராமரங்களும், தெசமாம் சிரராவணனார் முடி பொடி ஆக=பத்துத் தலைகளையுடைய இராவணனுடைய முடிகளும் தூளாகுமாறு, சிலை வாங்கிய=வில்லை வளைத்த, நாரணனார்=நாராயண மூர்த்தியுமாகிய திருமாலின், மருமகனாம் குகனே=திருமருகராகிய குகக் கடவுளே! பொழில் சூழ்தரு=சோலைகள் சூழ்ந்துள்ள, திருவேங்கடமாமலை மேவிய=திருவேங்கட மாமலை மீது எழுந்தருளியுள்ள, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! வரிசேர்ந்திடு சேல் கயலோ எனும்=வரிகள் படர்ந்துள்ள சேல் மீனோ? கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும், உழை=மான் போன்றதும், வளர்ந்திடு வேலையும்=நீண்ட கடல் போன்றதும், நீலமும்=நீலோற்பலம் போன்றதும், வடு=மாவடு போன்றதும், வாங்கிடு வாள்=செலுத்துகின்ற வாளாயுதம் போன்றதுமான, விழி மாதர்கள்=கண்களையுடைய பொது மாதர்களின், வலையாலே=வலை வீசுகின்ற சூழ்ச்சியாலும், வளர்கோங்கு இளமாமுகை ஆகிய=வளர்கின்ற கோங்கின் இளமொட்டு போன்ற, தனவாஞ்சையில்= தனங்களின் மீது உள்ள ஆசையாலும், முகமாயையில்=முகத்தின் மீதுள்ள மாயையாலும், வளமாம் தளிர்போல் நிறம் ஆகிய வடிவாலே=வளப்பமுள்ள மாந்தளிர் போன்ற நிறம் படைத்த அவர்களது வடிவத்தாலும், இருள் போன்றிடு=இருள் போன்ற, வார்குழல் நீழலில்=நீண்ட கூந்தலின் நிழலாலும், மயல் சேர்ந்து=மயக்கங் கொண்டு, இடு பாயலின் மீது உற=விரித்த படுக்கையின்மீது சேர்ந்து, இனிது ஆம் கனி வாய் அமுது ஊறல்கள்= இனிமையான கொவ்வைக் கனிபோன்ற வாயிதழ் அமுத ஊறலை, பருகாமே=உண்ணாமல், எனது ஆம் தனது ஆனவை போய் அற=எனது எனது என்னும் ஆசைகளானவை என்னைவிட்டு அற்றுப்போக, மலம் ஆம்கடுமோக விகாரமும்=அசுத்தமாகிய கடிய மோக விகாரங்களாகிய, இவை நீங்கிடவே=இக் குற்றங்கள் நீங்குமாறு, இருதாளினை அருள்வாயே=இரண்டு திருவடிகளைத் தந்தருளுவீராக. |