யானை தாவுகின்ற குதிரை, திரண்ட சேனை ஆகிய நால்வகைப் படையுடன் கூடிய துரியோதனனாதியர் போர்க் களத்தில் மாண்டொழியுமாறு, ஒப்பற்ற பாரதப் போரில் ஈடுபட்டுப் பெருமை மிக்க அர்ச்சுனனுடைய தேரில் ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய பார்த்தசாரதியும், ஒளி மிகுந்த சக்ராயுதத்தையுடையவரும், பாவத்தைப் போக்குபவரும், ரகு குலத்தில் வந்தவரும், அலைகள் நீண்டு ஒலிக்கும் கடலும், வாலியும், நீண்டு வளர்ந்த மராமரங்கள் ஏழும், பத்துத் தலைகளையுடைய இராவணனது முடிகளும் பொடியாகுமாறு வில்லை வளைத்த நாராயணரும் ஆகிய திருமாலின் திருமருகராம் குக மூர்த்தியே! சோலைகள் சூழ்ந்த திருவேங்கட மாமலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! வரிகள் படர்ந்த சேல் மீனோ? கயல் மீனோ? என்று சொல்லத்தக்கதும், மான் போன்றதும், செலுத்தத்தக்க வாள் போன்றதுமாகிய கண்களையுடைய மாதர்களின் வலை வீச்சினாலும், வளர்கின்ற கோங்கின் இளம்மொட்டு போன்ற தனங்களின் மீதுள்ள ஆசையினாலும், முகத்தின் மாயையாலும், வளமான மந்தளிர் போன்ற மேனியாலும், கரிய நீண்ட கூந்தலின் நிழலாலும், மயக்கங் கொண்டு விரித்த படுக்கையின் மீது சேர்ந்து, இனிய கனிபோன்ற வாயிதழ் பருகாமல், எனது எனது என்னும் ஆசைகள் என்னை விட்டு விலகவும், தூய்மையில்லாத கடிய மோக விகாரமானது நீங்குமாறும் தேவரீரது இரண்டு திருவடிகளை அருள்வீராக. விரிவுரை முன்னே உள்ளே ஒன்பது வரிகளிலும் பெண்மயிலின் தன்மையைச் சுவாமிகள் கூறினார்கள். எனதாந் தனதானவை போயற:- தனது-சிநேகம், எனது எனது என்று பொருள்களில் பற்று வைக்கின்ற பற்று அற்று ஒழிதல் வேண்டும் . பற்று அற்றாரே வீடுபேறு அடைவர். யான் எனதென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகு புகும். -திருக்குறள். மலம்-அழுக்கு. மனதிலே மலினத்தையுண்டாகுவன ஆசாபாசங்கள். |