தமிழினில் உருகிய அடியவர்:- தமிழ்-இனிமையான மொழி. இனிய தமிழில் இறைவனைத் துதிசெய்தால் உள்ளம் உருகும். சனன மரணமதை யொழிவுற:- பிறப்பிறப்பில்லாத பெருந்தகை முருகன், அப்பெருமான் அடியாரது பிறப்பிறப்பினை யொழித்து அருள்புரிவான். சிவமுற:- சிவத்துடன் இரண்டறக் கலக்கும் அத்துவித முத்தி. கருணைய விழி பொழி:- முருகவேளின் கண்கள் கடல்போல் கருணை பொழியும். “கருணை பொழி கமல முகமாறும்” (ஒருவரையு) திருப்புகழ். “மறுவறு கடலென மருவுபனிரு விழி வழிந்த அருளே பொழிந்து தொருபால்” -கொலுவகுப்பு. கடலுலகினில் வரும் உயிர்படும் அவதிகள் கழியவும்:- “முருகா! உலகில் உள்ள எல்லாவுயிர்களும் கவலையற்று வாழ வேண்டும்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார். சமரபுரி:- திருப்போரூர். இத்தலம் திரிபுராதிகளின் தந்தையான தாரகன் என்ற அவுணனுடன் முருகவேள் போர் புரிந்த இடம். தினமுமுனது துதிபரவிய அடியவர் மனது குடிபுகும்:- சதா இறைவனைப் பரவும் உத்தம அடியார்களின் உள்ளக் கோயிலில் அப்பரமபதி வீற்றிருக்கின்றான். “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்”
-அப்பர். “அடியவர் சிந்தை வாரிசு நடுவினும் உறைபவ” -(கொந்துவார்) திருப்புகழ். ஷடுமையில் நடுவுற:- ஆறக்கரங்களும் அடங்கிய ஆறு கோணமாகிய யந்திரத்தின் இடையில் முருகன் ஒளிமயமாக விளங்குபவன். கருத்துரை திருவேங்கடத்துறையுந் தேவனே! உன் திருவடி பெற அருள்வாய். |