அடியேனும் செழிக்க:- எந்தை கந்தவேளைச் சிவபெருமான் நெற்றிக்கண்ணினின்றுந் தோற்றுவித்ததற்குக் காரணம் மூன்று என்றனர். 1. தேவலோகம் தழைத்தல்; 2. அடியார்கள் உய்தல்; 3. மாலையன் மாயாது வாழ்தல். அலைவிட மாள:- அலை-கடல்; அலையையுடைய கடலென ஆகுபெயராகக் கொளப்பட்டது. இனி தேவர்கட்கு அலைவைத் தந்த விடமெனக் கொள்ளினும் பொருந்தும். மாள- வலிகெட. மழுமான்:- தாருகவனத்து இருடிகள் சிவபெருமானைப் பகைத்து அவரைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வியைச் செய்து மழுவையும் மானையும் அனுப்ப, அவற்றைச் சிவ பெருமான் திருக்கரங்களில் தாங்கியருளினார். திருக்கயிலை:- கயிலாய மலை என்றும் திருக்கயிலாய மலை என்றும் இரண்டு உண்டு. ஒன்று இமயமலையில் உள்ளது. மற்றொன்று மேலுலகத்தில் உள்ளது. இதன் விரிவை சிவரகஸ்யத்தில் காணலாம். கருத்துரை சிவ புதல்வரே! கடம்பரே! கயிலைமலைக் கடவுளே! சிவ அமுது உண்டு பற்றற்று சிவாநுபவத்தில் அழுந்தி முத்தி இன்பத்தில் என்றும் இருக்க அருள் புரிவீர். நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து மொழியாலும் திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை திரட்டி யெடுத்து வரவேசெய் திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ |