திருமாலின் திருமருகரே! கச்சணிந்து அமுதம் நிறைந்த கரும்பின் இரசத்தினது உருவாகிப் பருத்த வள்ளிநாயகியின் தனங்களின் நறுமணத்தில் முழுகும் பன்னிரு தோள்களையுடையவரே! பொன்னில் பதித்த சிறந்த மணிகளை யணிந்த திருமார்பினரே! கைவேல் ஆரவாரஞ் செய்தும் முற்றும் உண்ணுமாறு வாத்திய ஒலிவுடன் வந்த அசுரர் தலைவனாம் சூரனை கருநிறமுடைய அரக்கர் குலத்துடன் கோபித்து அழித்த இளம் பூரணரே! வழியுடன் கூடிய காடுகள் சூழ்ந்த திருவேங்கடமலையில் வாழும் பெருமிதம் உடையவரே! தேன் பொருந்திய பிச்சி மலரின் குளிர்ச்சியைக் கொண்டதாய், கச்சிதமாக முடிந்ததாய், கருமணலை ஒத்ததாய், சுருண்டு மணமுள்ளதும் இருளை அச்சுறுத்தியும் வாசனை மலர்களை வரிசையாகச் சொருகியுள்ளதாய் நறுமணத்தில் வாழ்கின்ற வண்டுகள் மொய்த்து மகிழவும், இரவை பயப்படுத்திச் சிக்கலில்லாததாய், அலங்காரத்தில் மென்மேலும் உயர்ச்சியடைந்ததாய், நெளிவும் சுருளும் உற்றதாய், விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், அஞ்சனமைக்கு ஒப்பு கமழ்கின்றதாய் விளங்கும் கூந்தலின் மீதும், பச்சைப் பொட்டு இட்டு அதன் நடுவில் சிவந்த பிரபை போல வளைத்த செழிப்புள்ள பிறைக்கு ஒப்பாக உறைவதாய் மன்மதன் வில்லையும் வானவில்லையும் ஒத்து சந்திரனை நிகர்ந்த திலகம் அமைந்துள்ள நெற்றியின் மீதும், உடம்பிலுள்ள மச்சங்களின் மீதும் அழகிய அதிசயமான சிவந்த உடம்பின் பக்கத்திலும் ஆசையுற்று, மனதில் நினைத்ததை யாவும் தருகின்ற உமது திருவடி மலரன்றி வேறு நிலையான பொருள் இல்லையென்று சொல்லுகின்ற மொழிகளைத் தழுவிய உண்மையான வழிபாடு செய்வதை விடுத்த அடியேனுக்குத் திருவருள் புரிவீராக! விரிவுரை இத்திருப்புகழில் முதல் இரண்டு அடிகளில் விலை மகளிரின் கூந்தலழகை விரிவாக அடிகளார் கூறினார். மூன்றாம் அடியில் அம்மகளிரின் நெற்றியின் பொட்டின் அழகைக் கூறினார். மனத்தினனைத்து அணைத்த துணைப்பதம்:- இறைவனுடைய திருவடி, அடியார்கள் மனதில் நினைத்தவை யனைத்தும் தரவல்லது. “மறவாதவர் நினைப்பவைமுடிக்குமவன்” - பூதவேதாள வகுப்பு |