“அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை முடிய வருவதும் அடியர்பகைகோடி சாடுவதும்”
-சீர்பாத வகுப்பு மலரலதிலைநிலை யெனமொழி தழியமெய் வழிபடல்:- எம்பெருமானுடைய சரணமலரன்றி வேறு நிலைத்த பொருள் இல்லை. அப்பரமனது பாதமே நிலைபேறானது. தண்டேன் துளிக்குந் தருநிழற்கீழ் வாழ்க்கை வெஃகிக் கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே கண்டேன் அவர்தம் பதத்தொலைவுங் கண்டனனால் தொண்டேன் சிவனே நின் தொல்பதமே வேண்டுவனே என்று இந்திரகுமாரன் சயந்தன் கூறுவதைக் காண்க. நச்சித்துச் சொப்பித்து:- துரியோதனன் வீமசேனனுடைய ஆற்றலைக் கண்டு அழுக்காறு கொண்டான். உணவில் நஞ்சு கலந்து அவனை உண்பித்தான். அவன் கண்ணபிரானுடைய கருணையால் பிழைத்தான் குட்டத் துட்டக் கட்டத் தசிகாண நடத்தி:- ஆற்றில் இரும்பு வசிகளை நட்டு துரியோதனன், பீமனை அதில் குதிக்குமாறு செய்தான். அவன் வஞ்சனையறியாத பீமன் அதில் குதிக்கும் பொருட்டு ஒடி வந்தான். கண்ணன் அந்த இடத்தில் வண்டு வடிவாக இருந்தார். வீமசேனன் சீவகருணை யுள்ளவன். ஆதலினால் வண்டுகள் உள்ள இடத்தில் குதித்தால் வண்டுகள் மாயும் என்று கருதி அதனைத் தாண்டிக் குதித்தான். நீந்தி வரும்போது நீரில் உள்ள இரும்பு வசிகளைக் கண்டு தெளிந்தான். இவ்வாறு கண்ணபிரான் அவனுக்கு அருள் புரிந்தார். விடத்தை யுடைத்த படத்தினில் நடநவில்:- யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. பகவான் கண்ணன் அங்கு சென்று மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்து, பாம்பினுடன் போர்புரிந்து வென்று அப்பாம்பின் படத்தின்மீது திருவடிவைத்து நடனம் புரிந்தருளினார். காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களமாகிய ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி அறிவு என்ற கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான். |