பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 67

 

ஏற்படும். நாவில் நரம்பு வைத்தால் பேசும்போது சுளுக்கிக் கொள்ளும். நாக்கு சுளுக்கிக் கொண்டால் பேச்சு அப்படியே தடைபட்டுவிடும். நமது கை, கால்கள் ஓயாமல் வேலை செய்வதில்லை. நாக்கு மட்டும் சதா மனைவியுடன், மக்களுடன், நண்பர்களுடன், வேலைக்காரர்களுடன் பேசிக்கொண்டேயிருக்கும். நரம்பிருந்தால் தினம் 2, 3 முறையாவது சுளுக்கிக் கொள்ளும். சுளுக்கிக் கொண்ட நாவை விளக்கெண்ணெய் தடவிவிட வேண்டிவரும். ஆதலால் பேசுவதற்கு என்று அமைத்துக் கொடுத்த நாவை நரம்பின்றி படைத்துக் கொடுத்தான் பரமன்.

அவன் கொடுத்த நாவினால் அவனையே யில்லையென்று கூறி நன்றி கொன்ற பாவத்துக்கு ஆளாகின்றார்கள் சிலர்.

இனி அவன் தந்த நாவினால் அவனுடைய நாமத்தை நவிலாமல் நன்றி மறந்த பாவத்துக்கு ஆளாகின்றார்கள் பலர்.

நன்றி மறப்பது வேறு; நன்றி சொல்வது வேறு.

“நன்றி மறப்பது நன்றன்று”

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
   செய்நன்றி கொன்ற மகற்கு”                        -திருக்குறள்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலர்
நாக்கைக் கொண்டான் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே யிரைதேடி யலமந்து
காக்கைக்கே யிரையாகிக் கழிவரே.
                                    -அப்பர்

“கல்லினோடு எனைப் பூட்டி யமண்கையர்
   ஒல்லைநீர்புக நூக்க என் வாக்கினால்
   நெல்லு நீள் வயல் நீலக் குடியரன்
   நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே”
                                           -அப்பர்

ஆதலால் ஹர ஹர என்று அன்பர்கள் கூறி துன்பத்தினின்று விலகி இன்பத்தை எய்துவார்களாக.

சிவன்:-

சிவம்-நன்மை. நன்மையே செய்கின்ற பரம் பொருள் சிவம். “சிவம் சாந்தம் சதுர்த்தம்” என்று சுருதி முழங்குகின்றது.

அரி:-

பாவத்தைப் போக்குபவர் நாராயணர். அதனால் அரியெனப் பெற்றார்.