அயனிவர் பரவிமுன் அறுமுக சரவணபவனேயென்ற நுதின மொழிதர:- அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் முருகனைத் துதிக்கின்றார்கள். மூவர்க்கு முதல்வன் முருகன் என வுணர்க. “படைத் தளித்தழிக்குந் த்ரிமூர்த்திகள் தம்பிரானே”
-(கனைத்த) திருப்புகழ் “மூவர் தேவாதிகள் தம்பிரானே” -(வாரிமீதேயெழு) திருப்புகழ் “உலகொரு தாளான மாமனும் உமையொரு கூறான தாதையும் உரைதரு தேவா சுராதிபர் பெருமாளே”
-(இருகுழைமீதோடி) திருப்புகழ் மூவருந்தேவரும் முருகப்பெருமானுடைய திருச்சந்நிதியிற் சென்று சூரசங்காரத்தின் பொருட்டு துதிசெய்து வேண்டிக் கொண்டார்கள். பரிபுர கமலம தடியிணை யடியவ ருளமதி லுறவருள் முருகேசா:- தன்னை நினைந்து நினைந்து உருகும் உத்தம அடியார்களுடைய திருவுள்ளத்தில் முருகன் தனது திருவடியை வைத்து அருள் புரிவர். “இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் என திதயமு மனக்கும் இருபாதச் சரோருகனும் -வேடிச்சி காவலன்வகுப்பு பகவதி:- பகம்-ஆறு. ஆறு குணங்களையுடையவள் பகவதி. அவை இறைவனுடைய அருட் குணங்களாகும். முறுவர:- முறுவரல்-முணுமுணுத்தல். வழிபாட்டில் தாம் முந்துதற்கில்லையே என்று முணுமுணுத்தல். “அறுகெடுப்பார் அயனும் அரியும் அன்றிமற் றிந்திரனோ டமர் நறுமுறு தேவர்கணங்க ளெல்லா னம்மிற் பின்பல்ல தேடுக்க வொட்டோம்” என்ற திருவாசகத்தால் அறிக. |